வருடா வருடம் இலங்கையின் கட்டுப்பாட்ட்டில் உள்ள கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா நடைபெற்று வருகிறது.
இராமேஸ்வரத்தில் இருந்து இந்தியர்கள் படகுகள் மூலம், சுமார் மூன்று மணி நேர பயணமாக செல்கின்றனர்.
இதற்கு காவல்துறை முதல் உளவுத்துறை வரை பதில் சொல்லிவிட்டே செல்ல வேண்டும்.
மத்திய அரசு, மூன்று கோடி வரை இந்த திருவிழாவிற்கு வரும் இந்தியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்ய இலங்கை அரசுக்கு தருகிறது.

ஆனால் மூன்றில் ஒரு பங்கு கூட அந்த தொகையை இந்தியர்களுக்கு செலவு செய்வது இல்லை இலங்கை அரசு.
அதுமட்டுமின்றி இந்தியர்கள் கச்சத்தீவில் படகுகளில் இருந்து தீவில் இறங்க சிறிதும் ஒத்துழைப்பு தருவது இல்லை.
சிங்கள மக்களுக்கு மட்டுமே வரும்போதும் திருப்பிச் செல்லும் போதும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மேலும் இலங்கையின் அமைச்சர்கள் அல்லது முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவதாக இருந்தால் இந்தியர்களின் சிரமங்கள் மேலும் அதிகரிக்கும்.

மத்திய அரசு நிதி அளிப்பது மட்டும் போதாது, கடுமையான பொருளாதார பிரச்சினையில் இலங்கை உள்ளதால், நம்முடைய சொந்தங்கள் ஒன்று கூடும் இடம் என்பதால், அங்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.
தமிழக அரசும் அதற்கு துணையாக இருக்க வேண்டும்.
இலங்கை அரசு குறிப்பாக தமிழர்கள் அங்கு வருவதை விரும்பவில்லை, அதன் காரணமாக எந்த அளவிற்கு உதாசீனம் செய்ய முடியுமோ, அந்த அளவிற்கு அகதிகள் போல நடத்துகின்றனர்.
ஆனாலும் நாம் தொடர்ந்து ஏன் செல்கிறோம் தெரியுமா ?
போருக்கு பிறகு பலர் இங்கு வந்தவர்கள் அங்கு செல்ல முடியவில்லை, அதே போல அங்கு உள்ளவர்களுக்கு இங்கு வர முடியாத நிலை உள்ளது.
சிலருக்கு பாஸ்போர்ட் முடக்கம், பயண செலவு பிரச்சினை என பல வகையான சூழலில், இந்த புனித அந்தோனியார் ஆலய திருவிழா, உறவுகளை சந்திக்க வைக்கும் பாலமாக விளங்குகின்றது.

இலங்கை மக்கள் சிறு வியாபாரிகள் அங்கு கொண்டு வந்து விற்கும் பொருட்களை நாம் வாங்குவதும், அவர்களுக்கு நாம் செய்யும் உதவியாகும்.
தேயிலை, தேங்காய் எண்ணெய், குறிப்பாக இலங்கையின் புகழ் பெற்ற ராணி சோப்பு போன்ற பொருட்களை இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.
நமக்கு பெரிதும் ஆதரவாக இருப்பது, இராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் படகு துறையினர் மட்டுமே.
காவல்துறையினர், பாதிரியார்கள் என பலர் ஒத்துழைப்பு தந்தாலும், பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதையும், போதுமான வசதிகளையும் வழங்கப்படுவது இல்லை, கடந்த சில ஆண்டுகளில், பத்திரிகையாளர்களுக்கு மறைமுகமாக தடை கூட விதிக்கப்பட்டது, ஆனால் நம்முடைய ஊடகவியலாளர்கள் தொடர்ந்து பயணம் செய்து ஆதரவு தந்து வருகின்றனர்.

வழக்குகள் காரணமாக தமிழக அளவில் 22 நபர்களின் படிவங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் உள்ளது, சுமார் 3900 பேர்கள் இந்தியாவின் சார்பிலும், சுமார் 10,300 பேர்கள் இலங்கையின் சார்பிலும் கலந்து கொண்டனர்.
இத்தகைய கூட்டம் வந்தது இதுவே முதல் தடவை.
ஏறக்குறைய 14,000 பேர்கள் கூடிய இடத்தில், அவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு, கழிப்பிடம் போன்ற எந்த ஒரு வசதியும் இல்லாதது மக்களை மிகுந்த சிறமத்தில் ஆழ்த்தியது.

ஒரு தேனீர், இலங்கை பணத்தில் 150 ரூபாய், இந்திய பணத்தில் 50 ரூபாய், லக்ஸ் சோப்பு, ராணி சோப்பு ஆகியவை, இந்திய பணத்தில் 50 முதல் 60 ரூபாய் வரையிலும், இலங்கை பணத்தில் 160 முதல் 175 வரை விற்கப்படுகிறது.
தேவாலயத்தின் பிராத்தனை மற்றும் பாடல்கள் எல்லாம் முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே நடைபெறுகின்றது.
பல வெளி நாடுகளில் இருந்தும் பலர் அங்கு வருகின்றனர், ஆகையால் ஒரு 10 நிமிடமாவது ஆங்கிலத்தில் கடவுளின் செய்தி இருந்தால், அது மேலும் சிறப்பாக இருக்கும்.

தமிழக அளவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், அதே போல மத்திய அரசன் சார்பிலும் முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டு, அங்குள்ள நிலவரங்களை நேரில் அறிந்து கொள்ள வேண்டும்.
கட்சத்தீவை மீட்போம் என்று சாத்தியம் இல்லாத வெற்று கோஷங்களை முன் வைத்து, அரசியல் செய்யும் கட்சிகள், அமைப்புகள் முதலில் அங்கு கூடும் தொப்புள் கொடி உறவுகளை சந்தித்து ஆதரவு தர வேண்டும்.
அங்குள்ள சிறுவர்கள் நம் ஊர் வேற்கடலை பருப்பிகளை அதிகம் விரும்புகின்றனர்.
சில தமிழர்கள் கடலை மிட்டாய் போன்ற பொருட்களை தந்து, அவர்களுடைய பொருட்களை பெறுவதும் உள்ளது.

எத்தனை வகையான புறக்கணிப்பு ஏற்படுத்தினாலும், நாம் தொடர்ந்து செல்வது, புனித அந்தோனியார் திருவிழாவிற்காக மட்டுமல்லாமல், நம் உறவுகள் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் வாய்ப்பை இழந்து விடக் கூடாது என்பதால்தான்.
கடுமையான வெயில், இரண்டு பகல், ஒரு இரவு எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் ஒரே இடத்தில் உணவு, உரக்கம் எல்லாம்.
அடுத்த ஆண்டு இதுபோன்ற குறைகளை சரி செய்து, அனைவரும் கலந்து கொண்டு, உறவுகளுக்கு வலிமை சேர்ப்போம்.

தோழமையுடன் டி.எஸ்.ஆர்.சுபாஷ் !
மாநில தலைவர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ )
9444111494
