அரசியல், இதில் வெற்றி பெற வேண்டுமென்றால், நல்லவர்களாக இருப்பதைவிட வல்லவர்களாக இருக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத சட்டம், நல்லவர்களை விட வல்லவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்ற ஒரு நிலைப்பாடு காலம் காலமாக அரசியலில் நிலவி வருகிறது. இந்த விஷயத்தை நாம் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்தே உற்று நோக்கினால் அது நன்றாக நமக்கு புரியும், அந்த விஷயம் தான் இன்றைய தமிழக அரசியலிலும் வெளிப்பட்டிருக்கிறது.

ஆமாம், அன்றைய மன்னர் காலத்தில் இருந்த அதே நிலைப்பாடு, இன்றைய காலகட்டத்தில், தமிழக அரசியலில் எடுத்து கொண்டால், ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கையும் அந்த பாதையில் தான் அமைந்திருக்கிறது. ஆமாம், ஓபிஎஸ் நல்லவராக பெரும்பாலுமானவர்கள் கண்களுக்கு தெரிந்தாலும், அவர் வல்லவர் இல்லை என்பதை, அவருடைய இன்றைய அரசியல் நிலைப்பாடு அனைவரையும் ஏற்றுக்கொள்ள செய்திருக்கிறது.

அதிமுகவில், அவர் மிகவும் கடைக்கோடி தொண்டனாக, எம்ஜிஆர் அதிமுக கட்சியை ஆரம்பித்த காலத்தில் இருந்தே, தனது அரசியல் பயணத்தை துவக்கி, 1996 ல் நகராட்சி தலைவர், 2001 ல் முதல், முதலாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதே காலகட்டத்தில் அனைவரிடமும் நல்லவர் என்ற பெயரையும், நல்ல நம்பிக்கையையும் அவர் பெற்றிருந்ததால், ஜெயலலிதா அவர்கள் 2001 ல் சிறைக்கு சென்ற போது, முதல் முதலாக முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஜெயலலிதா சிறையில் இருந்து திரும்பி வந்ததும், ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை அப்படியே அந்த அம்மாவிடம் ஒப்படைத்ததனால், அவருக்கு வருவாய்த்துறை என்ற ஒரு முக்கிய பொறுப்பில் அமர வைத்து ஜெயலலிதா அழகு பார்த்தார்.

2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சி அமைக்காத சூழ்நிலையில், ஜெயலலிதா தனக்கு பதிலாக, ஓபிஎஸ் ஐ, எதிர்க்கட்சி தலைவராக அமர வைத்து பணியாற்ற செய்தார். பின்னர் 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது, ஜெயலலிதா தனக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய மிக உயர்ந்த அமைச்சர் பதவியான, நிதி அமைச்சர் பதவியை வழங்கி பணியாற்ற செய்தார். பின்னர் 2014 ல் ஜெயலலிதா மீண்டும் சிறைக்கு சென்றபோதும், பின்னர், 2016 ம் ஆண்டு ஜெயலலிதா இறந்த பிறகும், முதலமைச்சராக இவர் தேர்வு செய்யப்படக்கூடிய அளவிற்கு அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு தான், இவருக்கு பலவிதமான சோதனை காலங்கள் வரத் தொடங்கியது. ஆனால், அவருக்கு பக்கபலமாக, அதிமுகவில் அடிமட்ட தொண்டர்கள் அவர் பின்னால் பெரும் திரளாக அணிவகுத்து நின்றனர்.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இவர் அரசியல் வாழ்க்கையில் ஒரு அடி கூட முன்னேறி செல்ல முடியாமல் பெரிய அளவில் தடுமாறினார். இவரை எதிர்நோக்கி வந்த ஒரு பிரச்சினையை கூட இவர் நேரடியாக எதிர் கொள்ள முடியாமல் திணறி படிப்படியாக இவர் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் பின்னோக்கி பயணிக்க துவங்கி விட்டார்.

இவருடைய அரசியல் பயணம் பின்னோக்கி சென்றதற்கான முழு முதல் காரணம், அவர் மட்டுமே ஆவார். ஏனென்றால், அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானவர்கள் இவர் பின்னால் பக்கபலமாக நின்றும் அந்த பலத்தை இவர் பயன்படுத்தி கொள்ளவில்லை.

எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இவரை அதிமுகவில் இணைத்து முக்கிய பொறுப்புகளை பெயரளவில் வழங்கிவிட்டு, ஆனால், அவரை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் ஒவ்வொருவரையாக வீழ்த்தி, ஓபிஎஸ் – ஐ பலவீனப்படுத்தினார். ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரு பெரிய கட்சி பதவி கையில் இருந்தும், அதை இவர் பயன்படுத்த கூடிய வல்லமை கூட இல்லாததால், மீண்டும், மீண்டும் கட்சியிலும் பலவீனப்படுத்தப்பட்டார். ஒரு காலகட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் ஐ கட்சியை விட்டு நீக்கிய பிறகு, கிட்டத்தட்ட அவர் அரசியல் நிர்கதியாக நின்று இருப்பதை பார்த்து அதிமுக தொண்டர்கள் பலர் வருத்தம் அடைய கூட செய்தார்கள்.

நரேந்திர மோடி முதல் சசிகலா, டிடிவி தினகரன் உட்பட அனைவரும் அவர்களுடைய அரசியல் ஆதாயத்திற்கு இவரை பயன்படுத்தி கொள்ள நினைத்தார்களே தவிர, இவரை பலமானவராக உருவாக்க நினைக்கவில்லை.

தற்போது கூட இவரோடு இணைந்து நின்று கொண்டிருந்த டிடிவி தினகரன் இவர் கையை உதறிவிட்டு அதிமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். அதற்கு காரணம், அவர் துணிச்சலாக ஒரு முடிவை எடுத்து அதிமுக கட்சிக்குள்ளே சென்று, வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடியின் செல்வாக்கு பலவீனமாக ஆகும்போது, அவரை எதிர்த்து ஒரு பெரிய அளவில் போர் தொடுக்க திட்டமிட்டு இருக்கிறார். இப்படி அதிரடியாக முடிவுகளை எடுத்து துணிச்சலுடன் இறங்கி விளையாட கூடிய வல்லமையும், துணிவும் இல்லாததால், ஓபிஎஸ் இன்று திமுகவில் தன்னை இணைத்து கொண்டு இருக்கிறார்.

ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததனால், திமுகவிற்கு பெரிய அளவில் எந்த பயனும் இருக்க போவதில்லை, ஒரு பெரிய கட்சியில் முதன்மையான ஒரு பொறுப்பில் இருந்தவர், இந்த கட்சிக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார் என்றால், ஓபிஎஸ் சை, கட்சியில் சேர்த்து கொண்டதால், எதிர்காலத்தில் பெரிய அளவில் தர்ம சங்கடத்தில் இருக்க போவது, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தான், திமுகவில் இப்போதே அதிமுகவில் இருந்து வந்தவர்கள் பெரிய, பெரிய பொறுப்புகளில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கை திமுகவில் உயர்ந்து, மிகவும் பலமாக இருப்பதால், அவர்கள் (சேகர் பாபு போன்றவர்கள்) இன்று திமுகவில் இருக்கக்கூடிய முன்னோடி தலைமை நிர்வாகிகளையே வம்பு இழுத்து, மோதிக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில், அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கு திமுகவில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது, திமுகவில் இருக்கக்கூடிய தலைமை நிர்வாகிகள் மட்டுமில்லாமல், மாவட்ட செயலாளர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை பலர் தங்களுடைய வளர்ச்சி பின்னடைவில் உள்ளது என்றும், தங்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை என்றும் வருத்தத்தில் இருக்கின்றார்கள் என்பது ஒரு மிக பெரிய உண்மை.

இந்த நிலையில், தான் ஸ்டாலின் ஓபிஎஸ் ஐ கட்சிக்கு வரவழைத்து இருக்கிறார். ஒரு பெரிய கட்சியில் தலைமை பொறுப்பில் இருந்த ஓபிஎஸ் ஐ, திமுக தலைமையில் 10 பேர் கூடும் இடத்தில் ஓபிஎஸ்ஐ , ஸ்டாலின் எந்த இடத்தில் உட்கார வைப்பார், அப்படியே, அவருடைய வழக்கமான பெருந்தன்மையுடன், திமுகவில் ஏதாவது ஒரு முக்கிய இடம் ஓபிஎஸ் க்கு கொடுத்தால், திமுகவில் அப்படி ஒரு இடம் கொடுக்க கூடிய அளவிற்கு இந்த கட்சிக்கு அவர் என்ன செய்துவிட்டார், என்ற கேள்வி ஒன்று எழும் இப்படிப்பட்ட ஒரு தர்ம சங்கட சூழ்நிலையை, திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் தனக்குத்தானே ஏன் உருவாக்கிக் கொண்டார் என்ற கேள்வியும் அவரை எதிர்நோக்கி நிற்கிறது.

ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததற்கு பதிலாக, அவர் மகனை மட்டும் திமுகவில் சேர்த்து விட்டு, இவர் 2026 தேர்தல் முடிவுகள் வரும் வரை சிறிது காலம் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து, எதிர்காலத்தில், அதிமுகவுக்கு எடப்பாடியால் ஒரு மிகப்பெரிய கண்டம் இருக்கிறது என்றும், அதை நான் அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சிக்கு வெளியில் நின்று அதிமுக கட்சிக்கு சோதனை வரும் போது, நான் கட்சியை காப்பாற்றவும், ஒருங்கிணைக்கவும் துணை நிற்பேன் என்ற ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு, வீட்டில் சும்மா அமர்ந்து இருந்து இருந்தாலே போதும், அவர் மீது பல லட்ச கணக்கான அதிமுக தொண்டர்கள் ஒரு மிகப்பெரிய அனுதாபத்துடனும், நல்ல மதிப்புடனும் இருந்திருப்பார்கள். அது வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கு வரக்கூடிய சோதனை காலகட்டத்தில் உதவியாக இருந்திருக்கும். அப்போது இவர் மீண்டும் அரசியல் பிரவேசம் செய்து வந்திருக்கலாம்.

ஆனால், அந்த காலகட்டத்தை கணித்து தான், இப்போதே டிடிவி தினகரன், அதிமுகவின் வளையத்திற்குள் நுழைந்து இருக்கிறார். வல்லவனுக்கு, வல்லவன் வையகத்தில் உண்டு, என்பார்கள் அந்த வாசகத்திற்கேற்றார் போல் எடப்பாடியை எதிர்காலத்தில், அதிமுகவின் களத்திற்குள்ளேயே மோதுவதற்கு துணிந்து களத்திற்குள் நுழைந்திருக்கிறார்.

தமிழக அரசியலில், சுயம்புவாக வளர்ந்த பல பெரிய, பெரிய தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு பெரிய தலைவராக உருவாக வாய்ப்பு கிடைத்தும், அதை தன்னால் கட்டி காப்பாற்றி கொள்ளவும், பயன்படுத்திக் கொள்ள கூட முடியாத ஒரு தலைவராக ஓபிஎஸ் இருந்து விட்டார் என்று, அதிமுக கட்சி தொண்டர்கள் மட்டுமில்லாமல், அதிமுக கட்சிக்கு அப்பாற்ப்பட்டும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் இருந்து, அவருடைய அரசியல் வளர்ச்சியை எதிர்பார்த்த பலர், ஓபிஎஸ் ஐ நினைத்து ஆதங்கம் பட தான் செய்கிறார்கள்.

கட்டுரை : P.G.பாலகிருஷ்ணன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed