இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெறும், என தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் அறிவிப்பு…

திருவள்ளூர் மாவட்டம் சென்னையை ஒட்டி இருப்பதால், அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய 50 சதவிகிதம் பகுதி சென்னையின் புறநகர் பகுதிகளாக இருந்து வருகிறது. அதனால், வளர்ந்து வரக்கூடிய அந்த பெருநகர பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்கும், கட்டுமான பணிகளுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏரிகளில் இருந்து தான் அதிகப்படியான சவுடு மண்களும், செம்மண்களும், மணல்களும் கொண்டு செல்லப்படுகின்றன. அப்படி கொண்டு செல்லப்படக்கூடிய மண்களில் 50% சதவிகிதம் அரசின் அனுமதி பெற்றும் 50 சதவீதத்திற்கும் மேல் அரசினுடைய எந்த அனுமதியும் இல்லாமல் அரசியல்வாதிகள், மற்றும் சமூக விரோத கும்பல்களின் துணையுடன் அந்த பெருநகர பகுதிகளில் பயன்படுத்துவதற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அதேபோலத்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருத்தணி பகுதியில் உள்ள கிராமத்திலிருந்து செங்கல் சூளைகளுக்கு அப்பகுதி சவுடு மண்களை லாரியின் மூலம் கடத்தி விற்பனை செய்வதாக திருத்தணி பகுதி செய்தியாளர் வினோத் என்பவருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் செய்தியாளர் வினோத் சவுடு மண் கடத்தல் குறித்த செய்தியை சேகரிப்பதற்காக சென்று செய்தி சேகரித்துவிட்டு திரும்பி வரும்போது, வினோத்தை, முருகப்பட்டு ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவியின் கணவர் பொன்னுச்சாமி என்பவர் வழிமறித்து, ” நான்தான் அந்த மண்ணை லாரிகள் மூலம் கடத்தி விற்பனை செய்கிறேன். உன்னால், என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள் ” எனக் கூறியவாறு வினோத்தின் கையில் இருந்த செல்போனை பறித்து கீழே போட்டு உடைத்திருக்கிறார். மேலும், ” நீ இங்கே இருந்து உயிரோடு செல்ல முடியாது ” எனக்கூறி அவரை தாக்க பாய்ந்துள்ளார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் பொன்னுச்சாமியை மடக்கி விட்டு வினோத்தை அங்கிருந்து காப்பாற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

வினோத் நேராக திருத்தணி காவல் நிலையத்திற்கு சென்று அந்த கிராமத்தில் நடந்த அனைத்தையும் குறிப்பிட்டு ஒரு புகார் மனு வழங்கினார். பின்னர், தன்னுடைய செல்போனை பழுது பார்ப்பதற்காக வேலூர் சென்று அங்கு கொடுத்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, திருத்தணி காவல் நிலைய போலீசார் வினோத்தை வழிமறித்து கைது செய்து திருத்தணி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த தகவலை அறிந்த திருத்தணி பகுதியில் பணியாற்றும் மற்ற செய்தியாளர்கள் திருத்தணி காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை விசாரித்து இருக்கிறார்கள்.

அப்போது, மண் கடத்தி விற்பனை செய்த பொன்னுச்சாமியின் மனைவியும், முருகப்பட்டு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவியுமான குணசுந்தரி என்பவர், வினோத் மீது ஒரு புகார் வழங்கியிருக்கிறார் என்றும், அதில், நாங்கள் மண் கடத்தி விற்பனை செய்வதை அறிந்த வினோத் தன்னிடம் மாமுல் கேட்டதாகவும், அதை தர மறுத்ததால், என்னை கையைப் பிடித்து வம்பு இழுத்தார் என சொல்லி புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் என போலீசார் பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கின்றனர்.

இதற்கிடையே, போலீசார் அவசர அவசரமாக வினோத்தை தனி வேனில் ஏற்றி 30 க்கும் மேற்பட்ட போலீசார் காவலுடன் அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். உடனே, அந்த வேனை பின் தொடர்ந்து சென்ற மற்ற செய்தியாளர்கள் மருத்துவமனை மற்றும் டிஎஸ்பி அலுவலகம் உட்பட பல இடங்களில் சென்று பார்த்தும் வினோத்தை அழைத்து வந்த போலீஸ் வேன் காணவில்லை,

உடனே, இது குறித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் திருத்தணி காவல் நிலையம் மற்றும் திருத்தணி ஆய்வாளர் சிவக்குமார் அவர்களுடைய செல்போனுக்கும் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்திருக்கிறார். ஆனால், எந்த வகையிலும் திருத்தணி ஆய்வாளரை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவர் சுபாஷ் அவர்கள் திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமாரை கண்டித்து, ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டார்.

பின்னர், அதிகாலையில் போலீசார் வினோத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, மீண்டும் சிறிது நேரத்தில் காவல் நிலையம் வர வேண்டும் என உத்தரவிட்டு அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி, இரண்டு, மூன்று மணி நேரத்தில் வீட்டிற்கு சென்ற வினோத் மீண்டும் காவல் நிலையம் வந்து ஆஜர் ஆனார். அதன் பிறகும் திருத்தணி போலீசார் அன்று மறுநாள் மாலை வரை காவல் நிலையத்தில் வினோத்தை உட்கார வைத்து பல விதங்களில் மன உளைச்சல் கொடுக்கும் வகையில் நடந்துள்ளனர்.

வினோத்தின் செல்போனை திருத்தணி போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்ததால், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகளும் மறுநாள் மாலை தான் வேறொரு எண்ணில் வினோத்தை தொடர்பு கொண்டு பேசக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது வினோத் கடந்த இரண்டு நாட்களாக திருத்தணி போலீசார் தன்னை நடத்திய விதம் குறித்து கூறியது அனைவரையும் கொதிப்படைய செய்தது.

இந்த பிரச்சனை குறித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் கூறுகையில்,

மணல் கொள்ளையர்களுக்கு அரசியல்வாதிகள், ரௌடிகள் துணைக்கு போன காலம் போய், தற்போது காவல்துறையே அவர்களுக்கு துணைக்கு நிற்பது இந்த சம்பவத்தில் மிகவும் வெளிப்படையாக தெரிய வருகிறது. வினோத் உண்மையிலேயே தவறு செய்திருந்தால் போலீசார் வினோத் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கலாம். ஆனால், திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் ஒரு மணல் கொள்ளையனுக்கு துணையாக நின்று கொண்டு, அந்த மண் கொள்ளையை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை கைது செய்து ஒரு தீவிரவாதியை போல் இரண்டு நாட்கள் கொடுமைப்படுத்தி, அவருக்கு மன உளைச்சலை கொடுத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.

திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் செய்திருப்பது ஒரு மனித உரிமை மீறல் செயல் ஆகும். இதை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. திருத்தணி போலீசாரை கண்டித்து, வருகின்ற 8 ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தனது தலைமையில் ஒரு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது எனவும், அதன் பிறகும், திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் மீது உயர் அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed