தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டம் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், தமிழக சபாநாயகர் மு.அப்பாவு நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 26(1)-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டம் வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடுகிறது. இதில் 2026-27 ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவைக்கு அளிப்பார் எனவும்,

மேலும், வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 193(1)-ன் கீழ் 2026-27 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகளும், பேரவை விதி 189(1)-ன் கீழ் 2025-26 ம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும். இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சட்டமன்ற கூட்டம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் அதாவது 16-ந்தேதி அலுவல் ஆய்வுக்குழு எனது தலைமையில் கூட்டப்பட்டு முடிவு செய்யப்படும்.

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை சட்டமன்றம் கூடிய நாள் முதல் என்ன பேசினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை உலகெங்கிலும் இருந்து பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சிறப்புத் தீர்மானங்கள் மானிய கோரிக்கைகள் அனைத்தும் நேரலை செய்யப்பட்டு வருகிறது. கூட்டத்தொடர் முழுவதையும் நேரலை செய்ய வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் எண்ணமாக இருக்கிறது. கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தையும் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சபாநாயகர் மு.அப்பாவு, நெல்லையில் செய்தியாளர்களிடத்தில் கூறினார்.

நெல்லை செய்தியாளர்:
செ.பா.தவசிக்கனி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed