ஒரு சமூகத்தின் நாகரிகமும் மனிதநேயமும், மிகவும் பலவீனமான மக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போராடும் ஆதரவற்றவர்கள், உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள், வீடற்று தெருவோரங்களில் வாழும் ஏழைகள் மற்றும் அடையாளம் தெரியாத நிலையில் உயிரிழப்பவர்கள் ஆகியோரின் வாழ்க்கை சமூகத்தின் மனசாட்சியை சோதிக்கும் உண்மையாகும். இத்தகைய மக்களின் வாழ்விலும் இறப்பிலும் மனிதநேயத்துடன் துணைநின்று சேவை செய்து வருகிறார் சமூகச் செயற்பாட்டாளர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர்
பெ. விஜயகுமார். அவரது தன்னலமற்ற பணிக்கு அவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா, மகள் கீர்த்தனா ஆதரவாக உள்ளனர். ஆதரவற்றவர்களின் வாழ்வாதாரப் போராட்டம் பல துயரங்களின் தொகுப்பாக உள்ளது. பசி, வறுமை, நோய், தனிமை, பாதுகாப்பின்மை மற்றும் சமூகப் புறக்கணிப்பு ஆகியவை அவர்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கங்களாக மாறியுள்ளன.பலர் ஒரு வேளை உணவிற்காகவும், ஒரு துணி உடைக்காகவும், மழையிலும், வெயிலிலும் பாதுகாப்பான ஓர் இடத்திற்காகவும் போராடுகின்றனர். இவர்களின் வாழ்க்கையில் ஒரு உதவும் கை நீளும்போது அது வெறும் உதவி அல்ல, அது வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் மனிதநேயச் செயலாகும்.

இந்த உண்மையை உணர்ந்து ஆதரவற்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார். பசிப் பிணி போக்க அன்றாடம் அன்னதானம் வழங்கி வருகிறார். பசியால் வாடும் ஒருவருக்கு உணவளிப்பது என்பது வெறும் இரக்கச் செயல் அல்ல, அது ஒரு உயிரைக் காப்பாற்றும் செயல். பலரின் முகங்களில் பசியின் வேதனையைப் போக்கி நம்பிக்கையின் புன்னகையை உருவாக்கி வருகிறார். உடுத்த உடையளித்து ஆதரவற்றவர்களின் மனித கண்ணியத்தை காத்து வருகிறார். உடை என்பது வெறும் ஆடை அல்ல, அது மனித கண்ணியத்தின் அடையாளமாகும். ஆதரவற்றவர்களுக்கு உடை வழங்குவதன் மூலம் அவர்களின் தன்மானத்தையும் தன்னம்பிக்கையையும் பாதுகாத்து வருகிறார்.

மனித வாழ்க்கையின் இறுதி அத்தியாயம் மரணம். ஆனால் வாழ்நாளில் யாருமற்றவர்களாக இருந்த பலர், இறப்பிலும் யாருமற்றவர்களாகவே விடப்படுகின்றனர். மருத்துவ மனைகள், சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் உயிரிழக்கும் ஆதரவற்றவர்களின் உடல்களை மீட்டு, உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்து வருகிறார்.ஒரு மனிதன் இறந்த பின்னரும் அவனது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பது நாகரிக சமூகத்தின் அடிப்படை மதிப்பாகும்.

உறவினர்கள் இல்லாத காரணத்தால் அல்லது அடையாளம் தெரியாத காரணத்தால் இறந்தவர்களின் உடல்கள் புறக்கணிக்கப்படாமல், அவர்களுக்கும் உரிய இறுதி மரியாதை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயல்படும் அவரது பணி, மனித கண்ணியத்தைப் பாதுகாக்கும் சேவையாகும்.
மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பாடு, பசியை போக்கும் இரக்கம், இறப்பிலும் மரியாதை வழங்கும் பண்பு ஆகியவை தமிழர் நாகரிகத்தின் அடையாளங்களாகும். அந்த மரபை ஒவ்வொருவரும் தனது செயல்களின் மூலம் நிலைநாட்ட வேண்டும்.

செய்திகள் : லெனின் லோகேஷ் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed