தமிழ்நாட்டு அரசியலில் தற்போது, எப்போதும் இல்லாதவாறு பெரிய அளவில் புயல் வீசி இருக்கிறது. அதனால் தமிழக அரசியலில் பல தலைகீழ் மாற்றங்களும் அரங்கேறி உள்ளது. இன்று ஒரு கட்சியில் இருப்பவர் நாளை எந்த கட்சியில் இருப்பாரோ என்று எதிர்பார்க்கும் அளவிற்கு தற்போது கட்சி விட்டு கட்சி மாறி வருகிறார்கள். இப்படி கட்சி மாறுவதில், தொண்டர்கள் மாறினால் பரவாயில்லை, நிர்வாகிகள் மாறினால் கூட பரவாயில்லை, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களே தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்து விட்டு புதியதாக ஆட்சி அமைத்திருக்கும், தவெக கட்சியில் ஓடிப்போய் ஐக்கியமாகி கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி, அதிமுக கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு 25-க்கும் மேற்பட்டவர்கள் தவெக கட்சியில் சேருவதற்கு தயாராக இருந்த நிலையிலும் கூட, அவர்களுடைய ஆதரவை ஏற்றுக்கொள்ளாமல், புதிதாக ஆட்சி அமைத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தன்னுடைய ஆட்சிக்கு ஆதரவாக கொள்கை பிடிப்பு கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிக கட்சிகளிடம் தான், ஆதரவு கேட்டு கடிதம் வழங்கினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, திமுக தலைமையின் இரண்டாம் கட்ட தலைவர்களின் இறுமாப்பு தனமான தவறான கூட்டணி பேச்சு வார்த்தையால், கூட்டணி கட்சியில் இருந்த அனைத்து கட்சிகளையும், அவமதிக்கும் வகையில், திமுக கட்சி தலைமையை தவறான முடிவை எடுக்க வைத்து, திமுக கூட்டணியின் தோல்விக்கு வழிவகுத்த செயலை உலகமே நன்கறியும்,

இந்த இரண்டு சம்பவத்தையும் சீர்தூக்கி பார்த்து யார் செய்வது தவறு, யார் செய்வது நியாயம் என்பதை அறியக்கூடிய பக்குவம் இல்லாதவர்கள் இல்லை தமிழ் நாட்டு மக்கள், இந்த சூழ்நிலையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள், எடுத்த முடிவு ஒவ்வொரு முடிவையும் மக்கள் நன்றாக அறிவார்கள். ஆனால், கடந்த பல வருடங்களாக திமுக கூட்டணி கொள்கை கூட்டணி என குரல் கொடுத்து அதற்கு பக்கபலமாக இருந்து வந்த விசிக தலைவரை திமுகவினர் குறை சொல்வதும், வசை பாடுவதும் தான் தவறு என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே புரியும்.

மக்களின் தெளிவான மனநிலையை திசை திருப்புவதற்காக தான், திருமாவளவன் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விஷயத்திற்கும், ஒவ்வொரு விதமாக பேசுகிறார் என்று, வித விதமாக கற்பனைகளை ஜோடித்து அதற்கு ஏற்றவாறு ஊடக பலத்தை கையில் வைத்து கொண்டு திமுகவில் ஒரு சிலர் கட்டுக்கதைகளை கட்டிவிடுகின்றனர்.

திருமாவளவன் அவர்கள் மீது புழுதி வாரிதூற்றும் திமுகவினரை நோக்கி பொதுமக்கள் தரப்பிலிருந்து ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது அது என்னவென்றால், திமுக கூட்டணிக்கு பலமாக நின்றது, கூட்டணி கட்சிகள் தான், அந்த கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் கூட்டணிக்கு நாம் பலமாக நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில், எதிரணியில் இருந்த விஜய் அவர்களையும், எடப்பாடி அவர்களையும், அதைவிட பலமாக மோடி அவர்களையும் கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பது உறுதியான சூழ்நிலையில், கடைசி நேரத்தில் திடீரென தேமுதிக கட்சியை திமுக கூட்டணி சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

அந்த சூழ்நிலையில், தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், நம்மிடம் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகள் வெளியேற மாட்டார்கள் என்ற துணிச்சலில், எடப்பாடி பழனிச்சாமி கருவேப்பிலையை போல் கூட பயன்படுத்த விரும்பாத, தேமுதிக கட்சியை திமுக கூட்டணியில் வரவழைத்து 10 தொகுதிகள் வாரி வழங்கப்பட்டது. அதே சமயத்தில் திமுக கூட்டணியில் இருந்த கமலஹாசனை மிகவும் கேவலப்படுத்தும் வகையில் இட ஒதுக்கீடு சீட்டுகள் ஒதுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், வேல்முருகன் கூட்டணியை விட்டே வெளியேற கூடிய சூழ்நிலையை உருவாக்கப்பட்டது. அடுத்து, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு சீட் குறைக்கப்பட்டது. விசிக கட்சிக்கும் எதிர்பார்த்த எண்ணிக்கையில் சீட்டு ஒதுக்கீடு செய்யாதது மட்டுமல்லாமல், எதிர்பார்த்த தொகுதிகளையும் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டது.

இப்படி கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியையும் புறக்கணிக்கப்பட்டும், தரம் குறைக்கப்பட்டும், அவமதிக்கப்பட்டும் நடத்தப்பட்ட சூழ்நிலைகளும் அந்த கட்சி தலைவர்கள் அனைவரும் கூட்டணி தர்மத்தை மதித்து தேர்தல் பணியில் ஈடுபட்டு தீவிர பிரச்சாரம் செய்து, திமுக கூட்டணியின் வெற்றிக்காக உழைத்து கொண்டிருந்தனர்.

அந்த, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்கள் மட்டும் இல்லாமல் அவர்களை சார்ந்த குடும்பத்தினர்கள் கூட மிகவும் விரக்தியில் தான் இந்த தேர்தலில் வாக்களித்து உள்ளனர். அதில், தொண்டர்களுடைய மனநிலையும், அவர்களுடைய குடும்பத்தார்களுடைய மனநிலைகளையும் தேர்தலின் முடிவுகள் காட்டிவிட்டது.

இதில், தமிழ்நாட்டு பொதுமக்களின் கேள்வி என்னவென்றால், திமுக தனது கூட்டணியில் ஏற்கனவே இருந்த கூட்டணி கட்சிகளை அவமதித்ததற்க்கும், கூட்டணிக்குள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்பட்ட தேமுதிகவிற்கு சீட்டுகளை வாரி வழங்குவதற்கும், காரணம் என்ன ? என்பதை இன்று வரை யாரும் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்பதுதான், பொதுமக்களிடம் பரவலாக பேசப்படும் விஷயம், இந்த உண்மையை எந்த ஊடகத்திலும் மட்டுமில்லாமல், திமுகவின் தோல்வியை ஆராய கூடிய அரசியல் வல்லமை படைத்த திமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் கூட இந்த கேள்வி எழவில்லையே என்பதுதான் வருத்தப்பட வேண்டியதாக உள்ளது.

இப்படிப்பட்ட சதுரங்க விளையாட்டின் ரகசியங்கள் எல்லாம் வெளிவரக் கூடாது என்பதற்காகத்தான், விசிக கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை நோக்கி, பலவிதமான கேள்வி கணைகளை தொடுத்து கொண்டிருக்கிறார்கள். அவர் விரக்தி அடைந்து விடாமல் அனைவருக்கும் பதிலளித்து வருகிறார். அதிலும், அரசியல் செய்து கொண்டும், தலை நிமிர்ந்து நின்று கொண்டு தான் பேசுகிறார்.

உண்மை நிலவரங்கள் இப்படி இருக்க, இன்றைய அரசியலில் ஒரு காமெடி காட்சி போல், வைகோ அவர்களுடைய நடிப்புகள் தினம் தினம் வெளிவந்து கொண்டிருப்பது தான் காமெடியின் உச்சமாக இருக்கிறது. நோபல் பரிசுக்காக எழுச்சித்தமிழரின் பெயரை பரிந்துரைக்கும் வைகோ அவர்கள் தமிழ்நாட்டின் வரலாறுகள் தெரியாத ஒரு சாமானியன் கிடையாது. அவர் ஒரு மாபெரும் வரலாற்றுப் பேராசிரியருக்கு சமமான அரசியல் அறிவு பெற்றவர் தான். ஆனால், அவரே இன்றைய அரசியலுக்கு ஏற்றவாறு கோமாளி வேஷம் போடுவது தான் கொடுமையாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் இன்றைய இளைஞர்கள் திருமாவளவன் அவர்களுடைய தினம், தினம் பேசக்கூடிய அரசியலை ஒவ்வொருவரும் கலந்துரையாடல் நடத்தி, தங்கள் அரசியல் அறிவுகளை வளர்த்து கொண்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு அவருடைய பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும், அரசியல் நகர்வுகளையும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள். அவர் மிகவும் தெளிவாக சொல்லி இருப்பார், பாஜகவை இந்திய அளவில் எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்றால், பாஜக கட்சியின் கொள்கைக்கு நேர் எதிர் கொள்கையை கொண்ட கட்சிகள் எல்லாம் ஒரே நேர்கோட்டில் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரக்கூடிய தீர்மானங்களை எதிர்ப்பதிலும், மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் இந்திய அரசு செயல்படும் செயல்களையும், திட்டங்களையும் எதிர்க்கும் வகையிலும், திமுக – தவெக கூட பாஜகவை எதிர்த்து கூட்டணி அமைத்து செயல்பட வேண்டும் என பேசினார்.

திருமாவளவன் அவர்களின் இந்த பேச்சின் அர்த்தத்தை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசியல் மேதை எனக் கூறிக் கொள்ளும் வைகோ அவர்களுக்கு இது புரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை, காரணம் என்னவென்றால், அவருடைய அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில், தமிழ்நாட்டில், இன்றைய அரசியல் சூழலை விட, நேர் எதிர் கொள்கைகளில், வட துருவம் – தென் துருவமாக செயல்பட்டு வந்த கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து அரசியல் செய்ததை அவர் அறிந்திருக்காமல் இருக்க மாட்டார்.

தமிழ்நாட்டு அரசியலில் கரைப்படியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்று உலகமே போற்றி பாராட்டக்கூடிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களை வீழ்த்துவதற்காக, தமிழ்நாட்டிலேயே முதல் முதலாக, 1967 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, திமுக 14 கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து அன்றைய தேர்தலை எதிர்கொண்டது.

அந்த கூட்டணியில், பெரியார், காங்கிரஸ்சை நோக்கி யாரை குற்றம் சொல்லியும், குறை சொல்லியும் அரசியல் பேசிக்கொண்டு இருந்தாரோ, அந்த காங்கிரஸ் தலைவரான ராஜாஜி அவர்களோடு, கரம் கோர்த்து கொண்டு பெரியாரின் வாரிசுகளான அண்ணா, கலைஞர் ஆகியோர் தேர்தலை எதிர்கொண்டு அந்த தேர்தலில் வெற்றியை பெற்று ஆட்சியும் அமைத்திருக்கிறார்கள்.

அது மட்டும் அல்ல அப்போது திராவிடத்தை எதிர்த்து அரசியல் செய்த, தமிழ் தேசிய களம் என்று ஒன்றை புதியதாக அமைத்து, அதற்கு “நாம் தமிழர்” கட்சி என்ற ஒரு கட்சியை உருவாக்கி ஊரெல்லாம் திராவிடத்தை எதிர்த்து பேசிய ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களையும் கூட்டணி சேர்த்து இந்த 1967 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை திமுக எதிர் கொண்டது என்பது, மதிமுக தலைவர் வைகோ அவர்களுக்கு தெரியாதா…

அதேபோல், 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இந்திரா காந்தியை எதிர்த்து காமராஜர் தலைமையில் உருவாக்கப்பட்ட ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும், காமராஜரின் தீவிர எதிர்ப்பாளராக இருந்த, ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் இணைந்து மெகா கூட்டணி அமைத்து திமுகவை எதிர்த்து போட்டியிட்டன. அதே தேர்தலில், திமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொண்ட கட்சி எது தெரியுமா, எந்த கட்சியை தேசிய அளவில் காமராஜரும், ராஜாஜியும் சேர்ந்து வளர்க்க வேண்டும் என்று பாடுபட்டார்களோ, அந்த காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவான, இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தான் திமுக அப்போதைய தேர்தலை சந்தித்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தது. இந்த நேர் எதிர், வட துருவ – தென் துருவ கூட்டணி அமைந்தது அரசியல் மேதை வைகோ அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்…

மேலும், 1975 ஆண்டிலிருந்து 1977 ம் ஆண்டு வரை இந்தியாவையே ஆட்டிப்படைத்த எமர்ஜென்சி காலகட்டத்தை கொண்டு வந்த இந்திரா காந்தியால், தமிழ்நாட்டில் திமுக கட்சியும், அந்த கட்சியில் இருந்த முக்கிய தலைவர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையை மறந்து, எமர்ஜென்சியை விலக்கி கொள்ளப்பட்ட அதே 1977 ம் ஆண்டில், திமுக – காங்கிரஸுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொண்டது என்பதும், திராவிட போர்வாள் வைகோ அவர்களுக்கு மறந்து போய்விட்டதோ…

அதன் பிறகும் கூட மாநில உரிமைகளை தட்டிப் பறிக்க கூடிய செயல்களை செய்து வந்த காங்கிரஸ் ஆக இருந்தாலும், பாஜக கட்சியாக இருந்தாலும், திராவிடக் கொள்கையை இறுக்கி பிடித்து கொண்டு பயணித்து கொண்டிருக்கும் திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி கூட்டணி அமைக்காமலா இருந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கூட்டணி அமையும் போதெல்லாம், அந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு (பஞ்ச் டயலாக்) காரணத்தை முன்னிறுத்தி கொள்வது அனைவருக்கும் வழக்கம் தானே,

கடைசியாக, 2024 ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட, திராவிடத்தின் கொள்கை எதிரியான பாஜகவை இந்திய அளவில் தோற்கடிக்கவும், மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு விதமாக தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் என நினைத்த திமுக, அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி அவர்களின் கொடநாடு பிரச்சனையை கையில் வைத்துக்கொண்டு மிரட்டி, அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர விடாமல் தடுத்து வைத்ததும், அதிமுகவின் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, அதிமுக கட்சி தலைமை பொறுப்பை தானே தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதிமுகவில் ஒருவரும் வெற்றி பெற்று, டெல்லி அரசியலுக்கு செல்லக்கூடாது என்ற எண்ணத்தை நிறைவேற்றி கொள்வதற்கும், அப்படி அதையும் மீறி ஒரு சிலர் வெற்றி பெற்று விட்டால், அப்போது மத்தியில் காங்கிரஸோ அல்லது மூன்றாவது அணியோ ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அந்த கூட்டணியில் திமுக இருந்தாலும், அதிமுகவும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எடப்பாடி பழனிச்சாமி அந்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். என்பது தமிழ்நாட்டில் அரசியல் புரிதல் இருந்த அனைவருக்கும் நன்றாகவே புரிந்து இருக்கும், அரசியல் ஆசான் வைகோ அவர்களுக்கா புரியாமல் இருந்திருக்கும்.

அதைவிட தெளிவாக தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் அரங்கேற்றம் அவருக்கு புரியாமலா உள்ளது. நேற்று வரை திமுக கட்சியையும், திமுக தலைவரையும் மிகவும் தரம் தாழ்த்தி விமர்சித்து வந்த, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களோடு இணைந்து திமுக பயணிக்க போகிறது இது எந்த கொள்கை கூட்டணி என்று புரியவில்லையே, இப்படி, “மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடும் கூட்டணி ” எல்லாம் தமிழ்நாட்டு அரசியலில் அரங்கேற இருக்கின்றது என்பது, நமது அரசியல் ஆசானுக்கு தெரியாமல் இருக்கிறது…

தமிழ்நாட்டில், இப்படியெல்லாம் நேர் எதிர் கொள்கைகளை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அன்றன்றைக்கு அரசியல் சூழலுக்கு ஏற்றவாறும், அரசியல் செய்வதற்கு ஏற்றவாறும், அரசியல் விளையாட்டு விளையாடியதை எல்லாம், நன்றாக தெரிந்தும், புரிந்தும் வைத்திருக்கும் தமிழ்நாட்டு அரசியல் ஆசான் வைகோ அவர்கள், நடிக்கும் நடிப்பு நடிகர் திலகத்தை கடந்த ஒரு நடிப்பு, ஆகவே, அவருக்கு நோபல் பரிசு வழங்குவதற்கு, நாம் அனைவரும் பரிந்துரை செய்வதுதான் நன்றாக இருக்கும்…

P.G. பாலகிருஷ்ணன் /. எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed