இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிலிருந்து தமிழ்நாட்டில் நீதி கட்சி ஆட்சியில் காலகட்டத்தில், சென்னை மாகாணம் முழுவதும் கிராமப்புறங்களில் கூட சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்கள் துவக்கப்பட்டிருந்தன. அந்த நூலகங்களை நிர்வகிப்பதற்கு என 1925 – 26 ம் நிதியாண்டில் அதிகப்படியான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது. இப்பணிகள் துவங்குவதற்கு முன்பாகவே 1920 ம் ஆண்டு நீதி கட்சி ஆட்சி கால கட்டத்தில் கொண்டு வந்த, “மெட்ராஸ் ஆரம்பக் கல்வி திட்டம் ” என்ற ஒரு சிறப்பான திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்த திட்டத்தை தான், 1948 ம் ஆண்டு காலகட்டத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, “தமிழ்நாடு பொது நூலக சட்டம் ” என்ற ஒரு புது திட்டம் வடிவமைப்பதற்கு அடித்தளமாக அமைந்தது. அப்போது இருந்துதான் தமிழ்நாட்டில் நூலகத்திற்கு பல விதங்களில் திட்டங்களை மாற்றி அமைத்து தற்போது வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கக்கூடிய இந்த திட்டத்தின் வாயிலாக, தமிழ்நாட்டில் 7 விதமான நூலகங்கள் இயங்கி வருகின்றன.
மாநில நூலகங்கள், மாவட்ட நூலகங்கள், முழு நேர கிளை நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர் புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் என இந்த நூலகங்கள் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 4,600 க்கும் மேற்பட்ட நூலகங்கள் மட்டுமே இந்த துறையின் நேரடி பார்வையில் நல்லபடியாக, முறையாக இயங்கி வருகின்றன. ஆனால், நூலக துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத பல ஆயிரக்கணக்கான நூலகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

அவைகள், ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில், கிராம ஊராட்சி அளவில் 12,000 திற்கும் மேற்பட்ட நூலகங்கள் மற்றும் பள்ளிகள் கல்லூரிகள் அளவிலும் நூலகங்கள் இயங்குகின்றன. இவைகளை தவிர்த்து, நம்முடைய பாரம்பரியம் கலாச்சாரங்கள் மற்றும் முந்தைய காலத்து அடையாளங்களை பாதுகாத்து பேணி காக்கக்கூடிய பல நூலகங்கள் இயங்கிக் கொண்டுதான் வருகின்றன. இப்படி, நூலகங்கள் என்றால், அங்கு படிக்கும் மாணவ – மாணவிகள், இளைஞர்கள் மற்றும் அறிவார்ந்த வாசகர்கள் போன்றவர்கள் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய ஒரு புனிதமான தளமாக, நூலகம் இருந்து வந்தது.

இந்நிலையில் தான், கடந்த 2000 – மாவது ஆண்டிலிருந்து, நூலகங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களாக வரக்கூடிய யாராக இருந்தாலும் ஒரு தெளிவான முடிவெடுத்து செயல்படுவது கிடையாது. தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சியாளர்களிடையே நூலகங்கள் அமைப்பது குறித்து இருக்கக்கூடிய குழப்பங்கள் மக்களை வெறுப்படைய வைத்துள்ளது.

உதாரணமாக, தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சி மன்ற பகுதிகளிலும் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் “அய்யன் திருவள்ளுவர் நூலகம் மற்றும் படிப்பகம்,” 2000 – மாவது ஆண்டு ஜனவரி 16 – ம் தேதி (திருவள்ளுவர் தினத்தன்று) அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் உத்தரவின்படி தொடங்கப்பட்டது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதன் (ஜனவரி 1, 2000) நினைவாக, தமிழகத்தில் உள்ள 12, 600-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளிலும் தலா 5,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த படிப்பகங்கள் அமைக்கப்பட்டன. அதன் மூலம் ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் ஒரு அறையில் இந்த நூலகங்கள் வைக்கப்பட்டு செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் வரலாற்று நூல்கள் போன்றவை வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.

ஆனால், அதற்கு பிறகு 2001 ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவர்கள் தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் இயங்கி வந்த, அந்த திருவள்ளுவர் படிப்பகத்தை இழுத்து மூடினார். அதன் பிறகு மீண்டும் 2007 – ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சி காலகட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து ஊராட்சியிலும் 3 லட்ச ரூபாய் செலவில் புதிய நூலக கட்டிடங்கள் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் 50,000 ரூபாய் செலவில் அனைத்து வகையான நூல்களும் வைக்கப்பட்டன. அந்த புதிய கட்டிடம் டைல்ஸ் தரைகள் அமைக்கப்பட்டு பளபளப்பாக இருக்கும், அதிக அளவில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அந்த நூலகத்தை ஊராட்சி நிர்வாகம் தான் பராமரிக்க வேண்டும். ஆனால் அந்த நூலகத்திற்கு என்று பொறுப்பாளர்கள் தனியாக நியமிக்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் யாராவது நியமித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சிறிது காலகட்டத்திற்கு பிறகு அந்த நூலகங்களை நிர்வகிப்பதற்கு பணியாளர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் பெரும்பாலுமான நூலகங்கள் மூடப்பட்டே கிடக்கின்றன. தற்போது கூட அந்த கட்டிடங்களில் கிராம நிர்வாக அலுவலகமோ, அல்லது தபால் நிலையமோ, அல்லது ஊராட்சியின் பொருட்களை போட்டு வைக்கக்கூடிய குடோனாகவோ பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அல்லது ஊராட்சி மன்ற தலைவர்களுடைய தனி அலுவலகமாகவும், (சில இடங்களில் ஊராட்சி நிர்வாக மக்கள் பிரதிநிதிகளின் “மினி பார்” ஆகவும்) அது இருந்து வருகிறது.

இந் நிலையில், பெரும்பாலமான ஊராட்சிகளில் நூலக துறையின் நிர்வாகத்தின் கீழ் அதே ஊராட்சியில் நூலகங்கள் இருந்து வரக்கூடிய சூழ்நிலையும் உள்ளது. அந்த நூலகத்திற்கு பணியாளர்கள் தினமும் வந்து நூலகத்தை திறந்து வைத்து இருப்பார், ஆனால், அந்த நூலகங்கள் பெரும்பாலும் வாடகை கட்டிடத்தில் அல்லது பழைய கட்டிடத்திலும் தான் இயங்கி வருகின்றன. இப்படி ஒரே ஊராட்சியில் இரண்டு நூலகங்கள் இருக்கக்கூடிய நிலை அதிக அளவில் உள்ளது.

இவ்வளவு குளறுபடிகளுக்கு இடையே, முந்தைய ஆட்சி காலத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல புதிய, புதிய நூலகங்களை துவக்கி வைத்தார். அவைகளில் குறிப்பிடத்தக்கது, தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவுசார் மையங்களை உருவாக்கி அதில் போட்டி தேர்வுகள் எழுதக்கூடிய மாணவ – மாணவிகள், இளைஞர்கள் அதிகளவில் பயன்படும் வகையில் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

இப்படி நீதி கட்சி ஆட்சி காலத்தில் இருந்து, தற்போதைய ஆட்சி வரை திராவிட கொள்கையின் கீழ் நடைபெறக்கூடிய ஆட்சியாகவே மக்களால் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, மாணவ – மாணவிகளும், இளைஞர்களும் அதிக அளவில் பயனடையும் வகையில் நூலகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவைகள் பாராட்டப்பட வேண்டியவை தான், ஆனால், அதில் சில குறிப்பிட்ட குளறுபடிகள் இருப்பதை தான் கலைய வேண்டியது உள்ளது.

தமிழ்நாட்டில், நூலகத்துறை என்ற தனித்துறை இருக்கும்போது, புதியதாக எந்த மாதிரியான நூலகங்கள் துவங்கினாலும், அவைகள் அனைத்தும் நூலக துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் அந்த துறையின் கீழ் ஒப்படைக்க வேண்டும் வேண்டும். ஊரக வளர்ச்சி துறை போன்ற மற்ற துறைகளின் நிர்வாகத்தின் கீழ் நூலகத்தை ஒப்படைத்து நிர்வகிக்க செய்தால், தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட நூலகங்கள் கதி தான் ஏற்படும்.

இதைப் போன்ற குளறுபடிகளை பயன்படுத்தி தான்,
போலி, அகல்விளக்கு பிரசுரங்கள் எல்லாம் பிரகாசமாக
ஏரிந்து கொண்டிருக்கின்றன. அவர்களை காப்பாற்ற போலியான போர்க் குரல்கள் கொடுக்கும் அரசியல்வாதிகளின் சத்தங்கள், இன்றைய தீபாவளி வெடி சத்தங்களை விட அதிகமாக சத்தமிட்டு பேசி, காதுகளை கிழிக்கின்றன.

நூலகத்துறையில் இப்படிப்பட்ட குளறுபடிகள் நடப்பதற்கு காரணம், திமுகவோ, அதிமுகவோ, தவெகவோ என்று மட்டும் கூறி விட முடியாது. இந்த ஆட்சியாளர்களை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கூட்டம், ஒரே கூட்டம் தான் என, நாம் புரிந்து கொள்ள முடிகிறது . அந்த கூட்டம் தான், ஆட்சியாளர்கள் யார் மாறினாலும் அவர்களிடம் தொடர்பு வைத்து கொண்டு, அவர்களுக்கு கமிஷன் கொடுத்து காரியங்களை சாதித்து கொள்கின்றன. மறைவிலிருந்து போலி பிரசுரம் நடத்தி, போலி எழுத்தாளர்கள் புனைப்பெயர் என்ற பெயரில், போலியான புத்தகங்களை தயாரித்து, ராமனை போல் மறைந்திருந்து கொள்ளை அடித்து கொண்டிருக்கும் , போலி இராமன்களை, ராவணனின் மகன் என்று கூறிக்கொண்டு இருக்கும், தமிழக முதல்வர் விஜய் அவர்கள்தான் கண்டுபிடித்து வேட்டையாட வேண்டும், என்பது தான் நூலகங்களின் மீதும், நூல்களின் மீதும் ஆர்வம் கொண்டு இருக்கும் வாசகர்களின் குரலாக இருந்து வருகிறது.

P.G.பாலகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed