விருதுநகர் மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 40 ம் எண் நூல் கொண்டு நெசவு செய்து பொங்கலுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வேஷ்டி சேலைகளை குறைந்த கூலிக்கு நெசவு செய்து கொடுத்து வந்தனர்.


தற்போது தவெக அரசு உயர்ரக வேஷ்டி, சேலைகளை இந்த பொங்கலுக்கு வழங்குவதாக கூறி 40 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வந்த 40ம் எண் நூலுக்கு பதிலாக அறுபதாம் எண் என்ற இலகுரக நூலை வழங்க இருப்பதாக தகவல் வந்தது. இது இப்பகுதியில் உள்ள நெசவாளர்களுக்கு நெசவு செய்ய இயலாத நிலையில் உள்ளதாகவும், இதற்குரிய அச்சும் இலகு ரகமாக மாற்றுவதில் ஏராளமான பிரச்சனை உள்ளதாகவும் கூறி நெசவாளர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள 7 க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி வந்தனர். ராஜபாளையத்தில் உள்ள தெற்கு வைத்திநாதபுரம் நெசவாளர் கூட்டுறவு சங்கம் முன்பு இன்று சாலை மறியல் நடத்த இருப்பதாக தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து அங்கு சென்றனர்.

அங்கு நடுரோட்டில் தார்ப்பாய் விரித்து மறியலுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது தெற்கு காவல் ஆய்வாளர் சந்திரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று சமரசம் செய்தனர். அரசு கொள்கை முடிவாக இருப்பதால் உரிய அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுத்தால் மட்டுமே இதில் சமரசம் செய்ய முடியும் என்று கூறி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கூறி ஓரமாக இருக்குமாறு கூறினார்.

இந்நிலையில், வருவாய் ஆய்வாளர் அழகர், கிராம நிர்வாக அதிகாரி கணேசன் மற்றும் கைத்தறி துறை கண்காணிப்பாளர் திருப்பதி ராமன் ஆகியோர் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுக்க மேலதிகாரியிடம் பேசி ஏற்பாடு செய்வதாக கூறினார்கள். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடர்பு கொண்டு இன்னும் நான்கு தினங்களுக்கு வரை பொறுத்து இருக்குமாறும், அதற்குள் உரிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் தெரிவித்ததாக கூறி போராட்டத்தை கைவிட்டனர்.

இன்னும் நான்கு நாட்களில் இதற்கு ஒரு முடிவு காணப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்த இருப்பதாக போராட்ட குழு சார்பில் அறிவித்துள்ளனர்.
செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777
