மதுரையில் பரபரப்பு! அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயருமான பி. எம். மன்னன் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவிடம், அதிமுக நிர்வாகியான பி. எம். மன்னன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சுமார் ரூ.30 கோடி வரை குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறி மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், நேற்று காலை பி. எம். மன்னனின் வீட்டிற்குச் சென்று அவரை முறைப்படி கைது செய்தனர். இந்த கைதைத் தொடர்ந்து அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டதுடன், இது ஆளுங்கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் பொய் வழக்கு என்றும் விமர்சித்தார்.
இதனிடையே, நேற்று இரவு கைது செய்யப்பட்ட பி. எம். மன்னனை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஜோசப் சாய் முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

அப்போது, “ விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவசர அவசரமாக ஏன் கைது செய்யப்பட்டார் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க மறுத்தார். மேலும், பி. எம். மன்னனைச் சொந்த ஜாமீனில் விடுவித்து அதிரடி உத்தரவிட்டார்.”
காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டு மன்னனை விடுவித்த சம்பவம், மதுரை அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தையும், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed