வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா நேற்று கோயிலில் கணபதி ஹோமத்துடன் கோலாகலமாக துவங்கியது.
இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேகம் துவங்கி சஷ்டி பாராயணம், பக்தர்களின் பஜனை வழிபாடு, பல்வேறு வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
மாலையில் சஷ்டி மண்டபத்தில் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள், நடனம், நாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு என பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள். பல்வேறு பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட இத்திருவிழா நேற்று கோயிலில் கணபதி ஹோமத்துடன் கோலாகலமாக துவங்கியது.
பூரண கும்பம் வைத்து ஜெப வழிபாடு நடந்தது. பூஜையின் முடிவில் பூஜிக்கப்பட்ட கும்பநீரால் சுப்ரமணியசுவாமிக்கும் வள்ளி, தெய்வானை தாயார்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மூவருக்கும் 18 வகையான அபிஷேக ஆராதனைகளுடன் திருமஞ்சன வழிபாடு, பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள், வழிபாடு ஆகியவை நடந்தது.
மாலையில் சஷ்டி மண்டபத்தில் ஆன்மீக கலை நிகழ்ச்சியாக திருப்புகழ் பாராயண வழிபாடும் எம். எஸ். சுப்புலட்சுமி இசை குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. வத்திராயிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
கந்த சஷ்டி விழா குழு நிர்வாகிகள் வெங்கடேசன், மாலா, முல்லைக்கொடி உள்ளிட்ட விழா குழுவினர், கோயில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி, பசுமை உலகம் குழுவினர் விஸ்வபாரதி புத்தகாலயம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
