காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் டாஸ்மாக் வசூல் தொகையான ஒன்றரை கோடி ரூபாயை, விபத்து நாடகமாடி மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வாரந்தோறும் தனியார் வங்கி ஏஜென்ட்கள் மூலம் விற்பனைப் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த தனியார் வங்கி ஏஜென்ட் தாஸ் (52) மற்றும் வாடகை கார் ஓட்டுநர் ஹபீப் ரஹ்மான் ஆகிய இருவரும் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணத்தை வசூலித்துக் கொண்டு காரில் சென்றுகொண்டிருந்தனர்.


நேற்றிரவு ஒரகடம் பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியின் அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு பணம் வசூலிக்கச் சென்றுள்ளனர். ஏஜென்ட் தாஸ் கடைக்குள் பணம் வசூலிக்கச் சென்ற நேரம் பார்த்து, காரில் ஓட்டுநர் ஹபீப் ரஹ்மான் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, திட்டமிட்டு வந்த மர்ம கும்பலைச் சேர்ந்த சிலர், பைக் ஒன்றில் அதிவேகமாக வந்து காரின் பின்புறம் மோதி வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால் காரை விட்டு வெளியே வந்த ஓட்டுநர் ஹபீப் ரஹ்மான் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அந்தச் சமயத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல், ஓட்டுநர் ஹபீப் ரஹ்மான் கவனத்தை திசை திருப்பி விட்டு, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் இருந்த காரைக் கடத்தித் தப்பியோடியது.


கொள்ளையடிக்கப்பட்ட காரை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு, தாம்பரம் நோக்கிய பாதையில் காரணித்தாங்கல் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி சாலை வரை ஓட்டிச் சென்ற கொள்ளையர்கள், காரை அங்கேயே நிறுத்திவிட்டு பணத்துடன் தப்பியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஒரகடம் காவல் துறையினர், கடத்தப்பட்ட காரை மீட்டனர். மேலும், கொள்ளையர்கள் அவசரத்தில் காரின் அருகே தவறவிட்டுச் சென்ற 18 லட்சம் ரூபாய் பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த துணிகரக் கொள்ளை குறித்து ஒரகடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


டாஸ்மாக் வசூல் பணம் எடுத்துச்செல்லப்படும் நேரம் மற்றும் வழித்தடம் குறித்து முன்கூட்டியே உளவு பார்த்து இச்சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதா?
இதில் உள்நபர்களுக்குத் தொடர்பு ஏதேனும் உள்ளதா?
என்ற பல கோணங்களில் காய்களை நகர்த்தி வருகின்றனர். ஓட்டுநர் ஹபீப் ரஹ்மான் மற்றும் ஏஜென்ட் தாஸ் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. கீர்த்திவாசன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து, டாஸ்மாக் கடை மற்றும் காரணித்தாங்கல் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
