காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முருகன் கோவிலுக்குத் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கந்த சஷ்டி விழா துவங்கியதை முன்னிட்டு கோவிலுக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அத்துடன், வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து இருந்தது.


குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே முறையான போக்குவரத்து காவல் துறையினர் இல்லாததால், அப்பகுதியில் வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதில் நோயாளிகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களும் அடுத்தடுத்துச் சிக்கித் தவித்தன. காவல் நிலையம் மிக அருகில் இருந்தபோதிலும், போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்ய போலீசார் யாரும் முன்வரவில்லை.


மேலும், அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர் நெரிசலைக் கண்டுகொள்ளாமல், அருகில் உள்ள கடையில் பேசிக் கொண்டிருந்தது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கித் தவிப்பதை கண்ட அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள், உடனடியாகக் களத்தில் இறங்கி போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


குன்றத்தூர் பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், காவல் துறையினர் அங்கு நிரந்தரமாகப் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தைச் சீர்செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செவ்வாய்க்கிழமையான நேற்றும் போக்குவரத்து நெரிசல் மிக அதிக அளவில் காணப்பட்டது. இன்றும் அதே நிலை நீடிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
