திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில், பதினாறாம் ஆண்டு “மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் – 2026” ஓவியக் கண்காட்சி, செப்டம்பர் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் – சௌபாக்கியா குளிர்மை அரங்கில் காலை 10 மணிமுதல் இரவு 7-30 மணி வரை நடைபெறுகிறது.
“செந்தமிழ்ச் செவியில் சித்திரத்தின் திரையில்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சியில், தமிழின் தொன்மையான இலக்கியப் பாடல்கள் தொடங்கி இன்றைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வரை இடம்பெற்றுள்ள சிறப்புமிக்க வரிகளின் கருத்துகளும், உணர்வுகளும் மாணவர்களின் கற்பனைத் திறன் மூலம் ஓவியங்களாகப் படைக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியப் பாடல் வரிகள், தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இடம்பெற்றுள்ள சங்க இலக்கியக் குறிப்புகள், மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் சிறப்புமிக்க இலக்கியப் பதிவுகள் இக்கண்காட்சியின் ஓவியப் படைப்புகளுக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளன. இக்கண்காட்சியில் சுமார் 40 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று 156 ஓவியப் படைப்புகளை உருவாக்கியுள்ளனர். பாலேட் நைப் பெயிண்டிங், அக்ரிலிக், ஆயில் பெயிண்டிங், போஸ்டர் கலர், வாட்டர் கலர் உள்ளிட்ட பல்வேறு கலை ஊடகங்கள் மற்றும் ஓவிய நுட்பங்களைப் பயன்படுத்தி இப்பணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியின் தொடக்க விழா செப்டம்பர் 26 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முதன்மை விருந்தினராக ஓவியர் ராம. சுரேஷ் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.
சிறப்பு விருந்தினர்களாக சிந்து சமவெளி ஆராய்ச்சியாளர் R. பாலகிருஷ்ணன், IAS (ஓய்வு) மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் டாக்டர் சுந்தர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
தமிழ் இலக்கியத்தின் செழுமையையும், இளம் தலைமுறையின் கற்பனை மற்றும் படைப்பாற்றலையும் ஒருங்கிணைக்கும் இக்கண்காட்சி, கலை ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்கலாம். அனுமதி இலவசம்.
ஓவியக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் மற்றும் முதல்வர் திருமதி நஸ்ரத் பேகம் செய்துள்ளனர்.
செய்திகள் : விஜயகுமார் / எதிரொலி . இன் / 8939476777
