சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்கும் காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசி மாத நான்காவது வெள்ளி கிழமையை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.


இதன் ஒரு பகுதியாக, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, குங்குமப்பூ நிற பட்டுடுத்தி, பல்வேறு வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட காமாட்சியம்மன், லட்சுமி, சரஸ்வதி சமேதராய் தங்கத்தேரில் எழுந்தருளினார்.


பின்னர், மகா தீபாராதனை காட்டப்பட்டு, மேளதாளங்கள் முழங்க “ஓம் சக்தி… பரா சக்தி” கோஷங்களுடன் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அம்மன் தங்கத்தேரில் கோவில் உட் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்து அருள்பாலித்தார்.
இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777
