மினி எலக்ட்ரிக்கல் கட்டிங் மெஷினுக்கு அரை டிக்கெட் கேட்ட நடத்துநர்! “அரை டிக்கெட் கிடையாது… கால் டிக்கெட் தான் வாங்குவேன்” – பயணிக்கும் நடத்துநருக்கும் இடையே பேருந்தில் பரபரப்பு! “அது என்ன பஞ்சுமிட்டாயா?” எனக் கேட்டு நடத்துநர் ஆவேசம் – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செய்யாறு நோக்கிச் சென்ற அரசு பேருந்தில், மினி எலக்ட்ரிக்கல் கட்டிங் மெஷினை எடுத்து சென்ற பயணியிடம் அதற்கான கட்டணம் செலுத்துவது தொடர்பாக நடத்துநருக்கும் பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஒருவர், தான் கொண்டு வந்த ஒரு மினி எலக்ட்ரிக்கல் கட்டிங் மெஷினை பயணிகள் லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கி கொண்டிருந்த நடத்துநர், மேலே வைக்கப்பட்டிருந்த மெஷின் யாருடையது எனக் கேட்டுள்ளார். பின்னர் அந்த மெஷினுக்கு அரை டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பயணி, “அரை டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது, கால் டிக்கெட் மட்டுமே எடுப்பேன்” எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நடத்துநர், ”அது என்ன பஞ்சுமிட்டாயா? அதற்கு அரை டிக்கெட் வாங்கித்தான் ஆக வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த பயணி, தனது மெஷினை எப்படிப் பஞ்சுமிட்டாய் எனக் கூறலாம் என்று கேட்டு நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த நடத்துநர், ”நீ டிக்கெட் எடுக்காமல் இருந்தால் உனக்குப் பணம் மிச்சமாகும். ஆனால், அதனால் எனக்குத்தான் வேலை போய்விடும்” எனத் தனது நிலையை எடுத்து கூறியுள்ளார். மேலும், பயணியிடம் கஞ்சா வைத்திருக்கிறாயா என்றும் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

இப்படியாக நீண்ட நேரம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்த நிலையில், கடைசியில் பயணி அரை டிக்கெட் எடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து நடத்துநர் பயணச்சீட்டை வழங்கி அதற்கான பணத்தையும் பெற்றுக்கொண்டார்.

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது நம்முடன் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கான கட்டணம் மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம். அதேபோல், பயணிகளிடம் விதிமுறைகளை விளக்கும்போது நடத்துநர்களும் நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு பயணச்சீட்டுக்காக, பயணிக்கும் நடத்துநருக்கும் இடையே தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுவதைத் தவிர்க்க இரு தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என சக பேருந்து பயணிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக, இந்த பிரச்சனைகள் வருவதற்கு காரணம் போக்குவரத்து துறையின் நிர்வாக குளறுபடி தான், தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கி இருக்கும் தமிழ்நாடு அரசு, பேருந்தில் பயணம் செய்யக் கூடிய பயணிகள் ஆண் குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து அரை டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும், பயணிகள் கொண்டு செல்லக்கூடிய சுமைகள் எத்தனை கிலோ எடைகள் வரை இருக்க வேண்டும் என்றும் தெளிவான விவரங்களை பேருந்தில் பயணிகளின் பார்வையில் வைக்க வேண்டும். என்றும் அந்தப் பேருந்தில் பயணம் செய்த சக பயணிகள் பேசிக்கொண்டனர்.

இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

செய்திகள் : வாசகர் குரல் : எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed