நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை விழிப்புணர்வு நிகழ்வில், மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் லயனல்ராஜ் தகவல்!



உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் மருத்துவக் கல்வி நிறுவனம் சார்பில், நீரிழிவு நோய் மற்றும் அதனால் ஏற்படும் ‘கண்’ பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி மருத்துவமனை முன்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்டிரி கல்லூரி, பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி, திருநெல்வேலி இதய ஜோதி நர்சிங் கல்லூரி மாணவ மாணவியர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் டி.லயனல் ராஜ் தலைமை தாங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து நீரழிவு நோயினால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாகப் பேசினார்.

அப்போது பேசிய, பேராசிரியர் டாக்டர் டி.லயனல் ராஜ் கூறியதாவது:

“இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஒரு முக்கியமான பொது சுகாதாரச் சவாலாகும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் எந்தவிதமான வலியோ, பார்வை குறைபாடோ இல்லாத நிலையிலும் விழித்திரையில் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் பார்வை நன்றாக இருக்கிறது என்பதற்காக ‘கண்’ பரிசோதனையைத் தவிர்க்கக் கூடாது.

குறிப்பாக, இரண்டாம் வகை நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட உடனேயே விரிவான விழித்திரைப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் கண் மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இன்றைய நவீன மருத்துவத்தில் விழித்திரை லேசர் சிகிச்சை, கண்ணுக்குள் செலுத்தப்படும் மருந்துகள் மற்றும் விழித்திரை அறுவைச் சிகிச்சைகள் மூலம் பல்வேறு பாதிப்புகளுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும். இருப்பினும், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதே பார்வையைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான வழியாகும்.

நீரிழிவு நோய் இருப்பதால் கட்டாயம் பார்வையிழப்பு ஏற்படும் என்பதில்லை. முறையான பரிசோதனையும் உரிய நேரத்தில் சிகிச்சையும் பார்வையைப் பாதுகாக்க உதவும். மேலும், இம்மனிதச் சங்கிலியில் பங்கேற்ற கல்லூரி மாணவ மாணவிகள் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே நீரிழிவு நோய் மற்றும் கண் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என டாக்டர் லயனல்ராஜ் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் டி.லயனல்ராஜ், கண் விழித்திரை பிரிவு டாக்டர் பிருந்தா உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

“இரத்தச் சர்க்கரையைப் பரிசோதிப்போம்!
விழித்திரையைப் பாதுகாப்போம்!
பார்வையிழப்பைத் தடுப்போம்!”

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி.இன் / நெல்லை.
கைபேசி எண்: 8825850212.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed