அக்காவை காதலித்து ஏமாற்றிய இளைஞர் சென்ற பைக் மீது, காரால் மோதி நிலைகுலைய வைத்து, சரமாரியாக வெட்டி கொலை செய்த தம்பி காவல் நிலையத்தில் சரண்.


​காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மீரான். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் துணிக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே கடையில், காஞ்சிபுரம் வெங்கடாசலபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற இளம்பெண்ணும் பணியாற்றியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால், தனக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதை மறைத்து, தனக்குத் திருமணமாகவில்லை எனக் கூறி மீரான் சௌந்தர்யாவை ஏமாற்றி வந்துள்ளார். இந்த விவகாரம் சௌந்தர்யாவின் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் மீரானை எச்சரித்து, சௌந்தர்யாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என நிறுத்திவிட்டனர். இதன் பின்னர் சௌந்தர்யா வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். காதல் தோல்வியாலும், ஏமாற்றத்தாலும் மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

​மகளை இழந்த சோகத்தில் குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில், தனது அக்காவின் மரணத்திற்கு மீரான்தான் காரணம் எனக் கருதிய அவரது தம்பி நந்தகுமார், அவரைப் பழிவாங்க முடிவு செய்து, கடந்த ஆறு மாதங்களாக மீரானைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

​இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு ஒளிப்பதிவு பணிக்காக மீரான் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கித் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கோலிவாக்கம் பகுதியில் பின்தொடர்ந்து வந்த நந்தகுமார், மீரானின் இருசக்கர வாகனத்தின் மீது தனது காரால் வேகமாக மோதியுள்ளார்.

​இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மீரானை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கை, கழுத்து, தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த மீரானை அப்பகுதி மக்கள் மீட்டு , காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிய போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மீரானை படு கொலை செய்த நந்தகுமார், அங்கிருந்து காரில் தப்பியோடி காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல் நிலையத்தில் அளித்த வாக்குமூலத்தில், “அக்காவைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலில்தான் சௌந்தர்யா தற்கொலை செய்து கொண்டார்; எங்களது குடும்பம் அனுபவித்த வேதனைக்கும் அக்காவின் உயிரிழப்புக்கும் பழிவாங்கும் நோக்கில் இந்தச் செயலில் ஈடுபட்டேன்” என்று நந்தகுமார் தெரிவித்ததாகப் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருமணமானதை மறைத்துக் காதலித்து, அக்கா தற்கொலை செய்து கொள்ளக் காரணமான இளைஞரை, அவரது தம்பி ஆறு மாதங்களாகத் திட்டமிட்டுக் காரால் மோதி நிலைகுலைய வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed