கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
மார்க்கெட்டை உடனடியாக மாற்ற வேண்டுமெனில் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள சப்படி பகுதிக்கு மாற்றலாம் எனவும், எதிர்காலத்தில் பேரண்டப்பள்ளியில் உள்ள அரசு நிலத்தில் புதிய மார்க்கெட் கட்டித் தர வேண்டும் எனவும் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எம். ராமகவுண்டர் வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பத்தலப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் மொத்த காய்கறி மார்க்கெட்டை முழுவதுமாக அப்புறப்படுத்த, இம்மாதம் 12-ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் கெடு விதித்திருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மார்க்கெட்டை அகற்றும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.எம். ராமகவுண்டர் தலைமையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் கே.எம். ராமகவுண்டர், ஓசூர் மாநகராட்சியாகத் தரம் உயர்ந்து மக்கள் தொகை பெருகிவிட்டதால், தற்போதைய பத்தலப்பள்ளி பகுதியில் மொத்த வியாபாரத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், புதிய பேருந்து நிலையம், மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, பள்ளிகள் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை ஆகியவை இப்பகுதியில் உள்ளதால், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மார்க்கெட்டை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமெனில், 22 ஏக்கர் பரப்பளவில் அனைத்து அடிப்படை வசதிகளுடனும், போக்குவரத்து நெரிசல் இன்றி தயார் நிலையில் உள்ள சப்படி பகுதிக்கு உடனடியாக மாற்றலாம் என்று யோசனை தெரிவித்தார்.
அதேபோல், எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு பேரண்டப்பள்ளி பகுதியில் உள்ள சுமார் 30 முதல் 40 ஏக்கர் அரசு நிலத்தில், நிரந்தரமாக ஒருங்கிணைந்த மார்க்கெட் கட்டித் தந்து, அதன் பின்னர் அங்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்க உள்ளதாகவும் கே.எம். ராமகவுண்டர் தெரிவித்தார். பத்தலப்பள்ளி மார்க்கெட் விவகாரத்தில் விவசாய அமைப்புகளிடையே இருவேறு நிலைப்பாடுகள் எழுந்துள்ளதால், ஓசூர் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
