தமிழ்நாட்டில் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 6 கல்வியியல் கல்லூரிகள் என 187 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் 8741 கௌரவ விரிவுரையாளர்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு இந்தியா முழுவதுமுள்ள அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாட வேளைக்கு ரூபாய் 1500 என கணக்கிட்டு மாதம் ரூபாய் 50000 வழங்க வேண்டுமென்று 28-01-2019 அன்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றமும் கௌரவ விரிவுரையாளர்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியமாக மாதம் 57,700 வழங்க வேண்டுமென்று ஆணை பிறப்பித்துள்ளது.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையையும் உச்சநீதிமன்ற ஆணையையும் நிறைவேற்றும் வகையில் கேரளா, பஞ்சாப், தில்லி போன்ற மாநிலங்களில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 50000-/- ரூபாய் வழங்கி வருகிறார்கள். ஹரியானாவில் 57, 700-/- ரூபாய் மாத ஊதியமாக வழங்கி வருகிறார்கள். புதுச்சேரியில் மாதம் 40000-/- ரூபாயும் கருநாடகாவில் பணி அனுபவத்திற்கு ஏற்ப 35000-/- ரூபாயில் இருந்து 45000-/- ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும் கருநாடகாவில் பணிக்காலத்தில் இறந்தாலோ அல்லது பணி ஓய்வு பெற்றாலோ பணக்கொடை வழங்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடும் உண்டு.

ஆனால் தமிழ்நாட்டில் இத்தகைய நடவடிக்கைகள் ஒன்றைக்கூட அரசாங்கம் பின்பற்றுவதில்லை.கௌரவ விரிவுரையாளர்கள் பன்னிரண்டு மாதமும் வேலை செய்தாலும் மாதம் 30000-/- ரூபாய் என பதினோரு மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.

கௌரவ விரிவுரையாளர்கள் உதவிப் பேராசிரியர் மணிக்குப் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு பரிந்துரைத்துள்ள அனைத்து கல்வித் தகுதிகளைப் பெற்றிருந்தும் உரிய அங்கீகாரமும் ஊதியமும் கிடைக்காததால் நடை பிணமாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் கடந்த ஆண்டு பருகூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான முனைவர் மு. பச்சமுத்து தனியாக அறை எடுத்து தங்கியிருந்தார். அவருக்கு முறையான உணவு இல்லாததால் செரிமான கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வந்த நா. அருமைதாஸ் சர்க்கரை நோயாளி. கடந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளோடு அவருக்கு பணி ஓய்வு என்பதால் அதை நினைத்து நினைத்து சர்க்கரை அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரைப் போலவே கூத்தாநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வந்த முனைவர் ச. அருணாசலத்திற்கும் கடந்த ஆண்டு பணி ஓய்வு என்பதால் வாழ்கையில் எந்தவொரு பலனும் இல்லையே எப்படி பணி ஓய்விற்குப் பிறகு குடும்பம் நடத்துவது என்ற மன உளைச்சல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

அவர்களைப் போன்றே நடப்பு கல்வியாண்டிலும் இந்த மாதத்தில் மட்டும் 05-10-2026 அன்று நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த முனைவர் சு. செந்தில்குமார் 07-10-2026 அன்று கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியைச் சார்ந்த எம். பெருந்தமிழ்க் கபிலன் 21-10-2026 அன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியைச் சார்ந்த முனைவர் து. சுரேஷ் 24-10-2024 அன்று கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த முனைவர் ந. சேவுகபாண்டியன் என்று ஒவ்வொருவராக இறந்துள்ளது கௌரவ விரிவுரையாளர்களிடையே பேரதிர்ச்சியையும் பெருஞ்சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதில் தோழர் த. சேவுகபாண்டியனுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மூளைக்குச் செல்லும் இரத்த குழாய் வெடித்து சிகிச்சைக்காக மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மருத்துவச் செலவிற்காக தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களிடம்
100, 200, 300, 500, 1000
என்று 1,11,000-/- (ஒரு இலட்சத்து பதினோராம்) நிதி திரட்டி நேற்று அவர் வேலை பார்த்த கல்லூரி முதல்வர் மூலமாக அவரது மனைவியிடம் தந்தோம். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி உயர்வால் பெறுகின்ற ஊதியத்தில் குடும்பத்தைப் பேண முடியவில்லையே என்கிற உச்சகட்ட மனச்சிதைவே இவர்கள் மரணத்திற்கான காரணமாக இவர்கள் கல்லூரியில் பணியாற்றும் தோழர்கள் கூறுகிறார்கள்.

ஆதலால், அண்ணன் சீர்
தாய்மாமன் சீர், தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம் போன்ற பல நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கௌரவ விரிவுரையாளர்களின் பிரச்சினைகளிலும் தலையிட்டு, பன்னிரண்டு மாதத்திற்கும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு பரிந்துரைத்த ரூபாய் 50000-/- ஊதியம் வழங்க வேண்டும்.

ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்டு அரசு துறைகளில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தவெக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு பரிந்துரைத்துள்ள தகுதிகளுடன் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் பணியனுபவம் உள்ளவர்களுகு உதவிப் பேராசிரியர் பணி வழங்க வேண்டும்.

பணிக்காலத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5000000-/- (ஐம்பது இலட்சம்) வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

அனைத்து கௌரவ விரிவுரையாளர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்

இவண்
ம. பழனி,
வி. வெண்ணிலா,
ச. இளம்பருதி

ஒருங்கிணைப்பாளர்கள்.
தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed