சம்பவ இடத்திற்கு
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சென்று பேச்சுவார்த்தைக்கு பின் 1 மணி நேர சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது

மதுரை திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் இருந்து வைக்கம் பெரியார் நகர் செல்லும் சாலையில், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை அவனியாபுரம் – வைக்கம் பெரியார் நகர் செல்லும் சாலையில் உள்ள டி. நகர், சந்தோஷ் நகர் 2-வது தெரு உள்ளிட்ட பகுதிகளில்சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளில் 3000 பேர் குடியிருந்து வருகின்றனர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தமாக மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக, மழைக்காலங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறுவதால் குடியிருப்புப் பகுதிகளுக்குச் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும், ஸ்கூட்டர் கார் போன்ற வாகனங்கள் கொண்டு செல்ல முடியாமல் சேற்றில் சிக்கி பதிந்து கொள்கின்றன. உயிரிழப்பு ஏற்பட்டால் இறந்தவரின் உடலைக்கூட எடுத்துச் செல்ல போதிய சாலை வசதி இல்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் தெருவிளக்குகள் இல்லாததால் குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் பாதுகாப்பு குறைபாடுகளால் அச்சம் தெரிவிக்கின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், திரண்டு வந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவனியாபுரம் – வைக்கம் பெரியார் நகர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் போலீசார், சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அடிப்படை வசதிகளைச் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும், கூடிய விரைவில் சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தராவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed