காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ரங்கசாமி குளம் ஆகிய பகுதிகளின் அருகே இயங்கி வரும் அம்மா உணவகங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்கள், தங்கள் சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கண்ட இரண்டு அம்மா உணவகங்களிலும் சேர்த்து மொத்தம் 24 பெண் பணியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கணவரை இழந்த விதவைகளாகவும், குடும்பச் சூழல் காரணமாகக் கணவரைப் பிரிந்து வாழ்பவர்களாகவும் உள்ளனர். வறுமைக் கோட்டிற்குப் கீழ் வாழும் இவர்கள், அம்மா உணவகப் பணியை மட்டுமே நம்பித் தங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவையும் குடும்பத்தையும் கவனித்து வருகின்றனர்.

​பணிக்குச் சேர்ந்த நாள் முதல் இன்று வரை மிகக் குறைந்த அளவிலான தினசரி ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய கடும் விலைவாசி உயர்வு மற்றும் வீட்டு வாடகை உயர்வுக்கு மத்தியில், தங்களுக்கு வழங்கப்படும் சொற்ப ஊதியத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்த இயலவில்லை எனக் கண்ணீர்மல்கத் தெரிவிக்கின்றனர்.

இந்த ஊதியத்தைக் கொண்டு பிள்ளைகளைச் சரியான முறையில் படிக்க வைக்க முடிவதில்லை எனவும், அன்றாட வாழ்க்கை நடத்துவதே பெரும் போராட்டமாக உள்ளதாகவும் ஆதங்கப்படுகின்றனர்.

​தங்களின் வாழ்வாதாரத்தைச் சீரமைக்கும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறப்புக்கவனம் செலுத்தி, தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களில் பணியாற்றி வரும் அனைத்துப் பெண் பணியாளர்களுக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாய் தினக்கூலியாக வழங்க உத்தரவிட வேண்டும் எனப் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களது நியாயமான இந்தக் கோரிக்கையை மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகப் பெண் பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து பணிபுரிந்து தங்களது கவன ஈர்ப்புப் போராட்டத்தைப் பதிவு செய்துள்ளனர்.

செய்திகள் : லக்ஷ்மி கந்தன் /எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed