காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் அரசு சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி, எறிபந்து (Handball) பயிற்சி பெற்று வந்த கல்லூரி மாணவிக்கு பயிற்சியாளர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​தமிழகத்திலேயே காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மட்டுமே செய்தித்துறை மற்றும் விளையாட்டுத் துறையின் சிறப்பு விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் தங்கி, அரசு சலுகைகளுடன் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்குச் சென்னையைச் சேர்ந்த ஜோசப் புஷ்பராஜ் (33) என்பவர் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்தார். கடந்த வாரம் இரவு சுமார் 9.15 மணியளவில், மேல்நிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவி ஒருவரை விடுதி அறைக்கு அருகிலுள்ள அறைக்கு அழைத்துச் சென்று ஜோசப் புஷ்பராஜ் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

​இதனை அறிந்த சக மாணவிகள், உடனடியாக அந்த அறையை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, மாவட்ட விளையாட்டு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் வருவதற்குள் ஜோசப் கதவைப் பலமாகத் தள்ளி, பூட்டை உடைத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இந்த காட்சிகளை சக மாணவிகள் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த அடுத்த நாள் மண்டல விளையாட்டு அதிகாரி ராஜா, விளையாட்டு அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் ஜோசப்புஷ்பராஜ்யிடம் விசாரணை நடத்தி, அவரைப் பணியிலிருந்து நீக்கம் செய்தனர். இருப்பினும், இச்சம்பவம் குறித்துக் காவல் துறையில் புகார் அளிக்காமல் மறைக்க முயன்றதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

​இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தியிடம் கேட்டபோது, இச்சம்பவத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், மாணவியின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் செய்தியாக வெளியிட வேண்டாம் என்றும் கூறிச் சம்பவத்தை மூடிமறைக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப் பெண் பயிற்சியாளர்களையே நியமிக்க வேண்டும் என அரசாணை உள்ள நிலையில், ஆண் பயிற்சியாளரை நியமித்தது ஏன் எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

​மாவட்ட நிர்வாகமும், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர் அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பணிநீக்கம் செய்யப்பட்ட பயிற்சியாளர் ஜோசப் புஷ்பராஜ் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : லக்ஷ்மி கந்தன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed