உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்,

“எங்கள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்கு தெரியும். தமிழக தலைவர்கள் எங்கள் மாநில விவகாரத்தில் தலையிட கூடாது” என கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார்.

மேய்ச்சலுக்குச் சென்ற தங்கள் மாடுகள் திரும்பவில்லை என்பதற்காக, அவற்றை தேடி காட்டுக்குள் சென்ற மூன்று தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்திருப்பதை தமிழ்நாட்டு முதல்வரும், அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கண்டித்திருக்கிறார்கள். இதுவொரு மனிதநேயப் பிரச்சனை. எந்த மாநிலத்திலும் மனிதநேயம் மீறப்படுமானால், அதை கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.

2000-ம் ஆண்டில் கர்நாடக எல்லைக்குள் கன்னட நடிகர் இராஜ்குமார் அவர்களை வீரப்பன் கடத்தி கர்நாடக காட்டுக்குள் சிறை வைத்திருந்த போது, அப்போதைய கர்நாடக முதலமைச்சர் கிருஷ்ணா அவர்கள் மூன்று முறை தமிழகத்திற்கு ஓடோடி வந்து அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை இராஜ்குமாரை மீட்க உதவும்படி வேண்டி கொண்டார். அப்போது வீரப்பன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய செய்தியில் “நெடுமாறனை அனுப்பினால் பேசுவதற்குத் தயார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கிணங்க தமிழக முதல்வர் என்னை வேண்டிக்கொண்டபடியும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா என்னை அழைத்து என்னிடம் வேண்டி கொண்டபடியும், நானும், நக்கீரன் கோபால், கொளத்தூர் மணி, பேரா. கல்யாணி, சுகுமார் ஆகிய தமிழர்கள் காட்டுக்குள் சென்று ஐந்து நாட்கள் வீரப்பன் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்குப்பின் நடிகர் இராஜ்குமார், அவர் மருமகன் கோவிந்தராஜ் ஆகியோரை விடுவித்து பத்திரமாக அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோமே அந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது, “இது எங்கள் மாநிலப் பிரச்சனை; தமிழர்கள் எதற்காக வருகிறீர்கள் என்று யாராவது கேட்டார்களா? அன்று நாங்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டிருக்காவிட்டால், இரு மாநிலங்களிலும் இனக்கலவரங்கள் மூண்டெழுந்து விரும்பத்தகாத நிகழ்ச்சிகள், படுகொலைகள் நடைபெற்றிருக்கும்.

எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபடாத அப்பாவி தமிழர்கள் மூவரை படுகொலை செய்துவிட்டு அதை திரையிட்டு மறைக்க கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் சிறிதளவும் மனசாட்சியில்லாமல் பேசுவதை பார்க்கும் போது, அண்ணல் காந்தியடிகள் தலைமை தாங்கி நடத்திய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர்தானா? என்ற ஐயம் எழுகிறது.

முதலமைச்சர் போன்ற பொறுப்பான பதவிகளில் இவரை போன்றவர்கள் தொடர்ந்து இருக்க அனுமதிப்பது அவர் சார்ந்துள்ள கட்சிக்கு பேரிழுக்காகும்.

தமிழர்கள் அனைவரையும் மட்டுமல்ல, மானிதநேயம் கொண்டவர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்திருக்கும் மூன்று தமிழர்களின் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தரவும், எதிர்காலத்தில் கர்நாடகம் வாழ் தமிழர்கள் யாருக்கும் இத்தகைய நிலை ஏற்படாமல் பாதுகாக்கவும், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்திற்கோ இப்பிரச்சனையை உடனடியாகக் கொண்டுசெல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.

என அந்த அறிக்கையில், கேரள முதல்வர் சிவக்குமாரை கண்டிக்கும், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

செய்திகள் ; லெனின் லோகேஷ் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed