கடலூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 22 பெண் தூய்மை பரப்புரையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சிப்பதாகக் கூறி, அவர்கள் புதன்கிழமை மாநகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை சேகரிப்பு மற்றும் தூய்மை தொடர்பான பணிகள் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் கடந்த 19 ஆண்டுகளாக 22 பெண்கள் தூய்மை பரப்புரையாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், குப்பைகளை முறையாக சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், குப்பை சேகரிப்பு பணியை மேற்கொண்டு வந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஏற்கெனவே பணியாற்றி வந்த 22 பெண் தூய்மை பரப்புரையாளர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, புதிய பணியாளர்களை நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல் வெளியானது.

இதனால் அதிர்ச்சியடைந்த 22 பெண்களும், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி புதன்கிழமை காலை கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தில், தங்களது பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களில் ஒருவரான பாரதி, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தி, பெட்ரோல் பாட்டிலைப் பறித்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி குளோப், திமுக கடலூர் மாநகர் செயலர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

‘19 ஆண்டுகள் பணியாற்றிய எங்களுக்கு மீண்டும் வேலை வேண்டும்’

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:

கடந்த 19 ஆண்டுகளாக தூய்மை பரப்புரையாளர்களாக பணியாற்றி வருகிறோம். கரோனா காலத்திலும் எங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றினோம். இந்நிலையில், எந்தவித மனிதாபிமான அடிப்படையும் இன்றி எங்களை பணி நீக்கம் செய்வது வேதனை அளிக்கிறது.

பணி நீக்கம் செய்யப்பட்டதால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலரின் தலையீட்டால் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. எங்களது நீண்டகால பணியையும், குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, 22 பேருக்கும் மீண்டும் பணி வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

22 பெண் தூய்மை பரப்புரையாளர்களின் போராட்டம் மற்றும் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed