சோழவந்தான், ஆகஸ்ட் 19:

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் பராமரிப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் தொடர்ந்து கேள்வி எழுந்து வருகிறது. நேற்று சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி சென்ற அரசு பேருந்தின் டயரில் திடீரென தீப்பிடித்து புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மற்றொரு அரசு பேருந்தில் என்ஜின் பகுதியில் இருந்து ஆயில் லீக் ஏற்பட்டு சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டிக்கு சென்ற அரசு பேருந்து ஒன்றின் டயரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்து அதிகளவில் புகை வெளியேறியதால் பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு இறங்கி வெளியே சென்றனர் அதிர்ஷ்டவசமாக தீ விபத்து பெரும் அளவில் பரவுவதற்கு முன்பாக கட்டுப்படுத்தப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து பயணிகள் மத்தியில் அச்சம் நீங்காத நிலையில், இன்று சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்தில் என்ஜின் பகுதியில் இருந்து ஆயில் லீக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. என்ஜின் பகுதியில் இருந்து ஆயில் வெளியேறிய நிலையிலும் பேருந்து தொடர்ந்து இயக்கப்பட்டதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

என்ஜினில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் படியும் பட்சத்தில், குறிப்பாக மழை பெய்து சாலை ஈரமாக இருக்கும் நேரங்களில் வாகனத்தின் கட்டுப்பாடு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் என்ஜின் பகுதியில் கசிவு ஏற்பட்டு அதிக வெப்ப நிலை காரணமாக தீ விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சோழவந்தான் வழியாக தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பேருந்துகளின் டயர், பிரேக், என்ஜின், ஆயில் லைன் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் முறையாக பரிசோதிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரே பகுதியில் அடுத்தடுத்து அரசு பேருந்துகளில் இதுபோன்ற பழுதுகள் ஏற்படுவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிய பழுது ஏற்படும் போதே பேருந்துகளை பணிமனைக்கு கொண்டு சென்று முழுமையாக பரிசோதனை செய்து, தேவையான உதிரிபாகங்களை மாற்ற வேண்டும் என்றும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழுதடைந்த பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சோழவந்தான் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழைய மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் உள்ள பேருந்துகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர் பழுதடைந்த பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed