வாடிக்கையாளரின் அனுமதி இன்றி சம்பந்தப்பட்ட செயலியே (app), தொலைவிலிருந்து நீக்கியதை கண்ட வாடிக்கையாளர் பெரும் அதிர்ச்சி. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது திருமுடிவாக்கம் காவல் நிலையத்தில் வாடிக்கையாளர் புகார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூரைச் சேர்ந்த சுரேந்தர் (வயது 38) என்பவர், பல்லாவரத்தில் உள்ள பிரபல உணவகத்தில் பிரியாணி ஆர்டர் செய்து, அதை வீட்டிற்கு கொண்டு வர ‘ராபிடோ’ (Rapido) செயலி மூலம் டெலிவரி புக் செய்துள்ளார்.

கூடுதலாக பணம் கேட்ட டெலிவரி ஊழியரிடம் சுரேந்தர் ஒப்புக்கொண்ட நிலையில், உணவை பெற்றுக்கொண்ட ஊழியர் திடீரென ஆர்டரை ரத்து செய்துவிட்டு, செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
இதுகுறித்து ராபிடோ வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டபோது, ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர், இந்த உரையாடலை ரெக்கார்ட் செய்வதாகவும், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.


திருமுடிவாக்கம் காவல் நிலையத்தில் சுரேந்தர் புகார் அளித்தபோது, போலீசார் ஆதாரமாக கால் ரெக்கார்டிங்கைக் கேட்டுள்ளனர். அப்போது போனை பரிசோதித்த சுரேந்தருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மற்ற அழைப்புகளின் பதிவுகள் அப்படியே இருக்க, ராபிடோ சேவை மையத்துடன் பேசிய அந்த குறிப்பிட்ட கால் ரெக்கார்டிங் மட்டும் போனில் இருந்து தானாக நீக்கப்பட்டிருந்தது.
பிரபல பிளே ஸ்டோர் செயலிகளுக்கு நாம் அளிக்கும் அனுமதி (Permission), நம் போனில் உள்ள தனிப்பட்ட தரவுகளையும், ரகசியங்களையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தனிநபர் தரவு ரகசியத்தன்மையை கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற செயலிகள் மீது காவல்துறையும், அரசு நிர்வாகமும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்றத்தூர் பகுதியில் , ஸ்மார்ட்போன் செயலிகளுக்கு முழு அனுமதி கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை! வாடிக்கையாளர்களின் கால் ரெக்கார்டிங்கை கூட RAPIDO என்ற பிரபல டெலிவரி நிறுவனம் கண்காணித்து கட்டுப்படுத்துகின்றது எச்சரிக்கையாக கேளுங்கள் என சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி / 8939476777
