திருச்சி புத்தூர் பகுதியில் வாழும் வீட்டையே நூலகமாகவும் புழங்கு பொருட்கள் காட்சியகமாகவும் 1995 ஆண்டு முதல் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோக ஆசிரியருமான விஜயகுமார் நடத்தி வருகிறார்.

ஆகஸ்ட் 12 இந்திய நூலகவியலின் தந்தை என போற்றப்படும் எஸ் ஆர் ரங்கநாதன் பிறந்த நாளான தேசிய நூலகர் தினத்தில் நாகரீக வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி இலவச நூலகத்தில் நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், நூலகங்கள் என்பவை வெறும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படும் இடங்கள் அல்ல, அவை மனித குலத்தின் அறிவுப் பெட்டகங்கள் மற்றும் நாகரிக வளர்ச்சியின் அடையாளங்கள் ஆகும்.

இந்தியாவில் தேசிய நூலக நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 அன்று இந்திய நூலகவியலின் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. மனிதன் தன் சிந்தனைகளையும் அனுபவங்களையும் எழுத்து வடிவில் பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து நாகரிக வளர்ச்சி வேகம் பெற்றது. அந்தப் பதிவுகளைச் சேகரித்து, எதிர்கால சந்ததியினருக்குக் கடத்தும் உன்னத பணியை நூலகங்கள் செய்கின்றன. அறிவுப் பசி உள்ள அனைவருக்கும் நூலகங்கள் ஞானத்தை வழங்குகின்றன. நாகரிக வளர்ச்சியில் நூலகங்களின் பங்கு அறிவுப் பரிமாற்றத்திற்கு அவசியமாகும். நாகரிகம் என்பது வெறும் கட்டடக் கலையோ தொழில்நுட்பமோ அல்ல, அது மனிதனின் சிந்தனை வளர்ச்சி. முந்தைய தலைமுறையினர் கண்டறிந்த அறிவியல், இலக்கியம் மற்றும் தத்துவ உண்மைகளைத் தற்கால தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நூலகங்களே.

ஒரு சமுதாயத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாற்றுத் தொன்மங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுவது நூலகங்களின் மூலமாகவே சாத்தியமாகிறது. ஒரு நல்ல புத்தகம் ஒரு நூறு நண்பர்களுக்குச் சமம். மனிதனிடம் உள்ள அறியாமை இருளைப் போக்கி, நல்வழிப்படுத்தும் ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு. வாசிப்புப் பழக்கம் மனிதனின் கற்பனைத் திறனையும் ஆழமான சிந்தனையையும் வளர்க்கிறது. சமுதாயத்தில் அமைதியையும் மனிதநேயத்தையும் விதைப்பதில் புத்தகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காலத்திற்கேற்ப மனிதனின் தேவைகள் மாறினாலும், அவற்றுக்கான தீர்வுகளைத் தரும் வழிகாட்டியாகப் புத்தகங்கள் எப்போதும் நிலைத்து நிற்கின்றன.

இந்தியாவில் நூலக முறையை முறைப்படுத்திய எஸ்.ஆர். ரங்கநாதன் உருவாக்கிய நூலகவியலின் ஐந்து விதிகள் உலகளாவிய நூலக இயக்கத்தின் அடிப்படைத் தத்துவங்களாகும்:

புத்தகங்கள் படிப்பதற்காகவே, ஒவ்வொரு வாசகருக்கும் அவர்தம் புத்தகம்,ஒவ்வொரு புத்தகத்திற்கும் அதற்கான வாசகர், வாசகரின் நேரத்தை மிச்சப்படுத்துங்கள்,
நூலகம் என்பது வளரும் ஒரு உயிருள்ள அமைப்பு ஆகும்.இணையமும் டிஜிட்டல் ஊடகங்களும் பெருகிவிட்ட இக்காலத்திலும் புத்தகங்களின் வாசனையும் நூலகங்களின் அமைதியான சூழலும் தரும் நிம்மதி அறிவு ஈடு இணையற்றவை. நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது அங்குள்ள நூலகங்களின் பயன்பாட்டைப் பொறுத்தே அமைகிறது.

எனவே, ஒவ்வொருவரும் நூலகங்களை நாடிச் செல்வோம்,வாசிப்புப் பழக்கத்தை நமது வாழ்வியல் கலாச்சாரமாக மாற்றுவோம் என்றார்.

செய்திகள் ; விஜயகுமார் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed