கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னதக்கேப்பள்ளி நாகவனத்தில் எழுந்தருளியுள்ள நாகம்மன் திருக்கோவிலில் 18 ஆம் ஆண்டு நாக சதுர்த்தியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன் முன்னதாக ஸ்ரீ நாகம்மா திருக்கோவில் நிர்வாகிகளான திருமதி வள்ளியம்மாள் சென்றாயன், பூசாரி ரோணுசாமி, சோமசுந்தரம், ஐயர் வீமன் ஆகியோர் தலைமையில் சின்ன தக்கேப்பள்ளி கிராமத்தில் இருந்து பெண்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக சின்னதக்கேப்பள்ளி, மாளகுப்பம் வழியாக, நாகவனம் கோவிலுக்கு பம்பை வாத்தியம் முழங்க, அம்மன் வேடமிட்டு, ஒயிலாட்டம், மயிலாட்டத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் இயற்கை அழகுடன் மிக பிரமாண்டமான நிலையில் எழுந்தருளிய நிலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிலையில் அமைந்துள்ள நாகம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது.

இந்த விழாவில் சின்னதக்கேப்பள்ளி, மாளகுப்பம், பெரியதக்கேப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, பெரிய கோட்டப்பள்ளி, கள்ளீயூர், கம்மம்பள்ளி, ஒண்டியூர், மேல்கரடிகுறி , கீழ்கரடிகுறி, கே பூசாரிப்பட்டி உள்ளிட்ட 52 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டு, உலக நலன் வேண்டியும், மழை வேண்டியும், உலக மக்கள் யாவரும் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழவேண்டியும் பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இந்த விழாவினைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed