விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே ஒரு தலை காதலால் சிறுமியை தொந்தரவு செய்த இளைஞர்களை தட்டி கேட்ட சிறுமியின் தந்தையை இளைஞர்கள் மூவர் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விபரமாவது;
வத்திராயிருப்பு தாலுகா கோட்டையூர் கிழக்கு பகுதியை சேர்ந்த அய்யனார் (38 ). இவரது (17 வயது) மகள் அங்குள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த பெரியசாமி (21 வயது) என்ற இளைஞர் மாணவியை காதலிப்பதாக கூறி அவர் பள்ளி செல்லும்போது பின் தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்தார். இது பற்றி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து மாணவியின் தந்தை அய்யனார், பெரியசாமியை கண்டித்தார்.
இதனால் அய்யனார் குடும்பத்தினருக்கும், பெரியசாமி குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதமாக மாறி பகை நீடித்தது. இந்த பகையை மனதில் வைத்துக்கொண்டிருந்த பெரியசாமி, தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த அய்யனாரிடம் வேண்டுமென்றே தனது சகோதரர் அழகுராஜா உள்ளிட்ட குடும்பத்தாருடன் சேர்ந்து தகராறு செய்தார்.

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் பெரியசாமி மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யனாரின் முதுகில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்த அய்யனாரின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகள் மற்றும் மகன் சம்பவ இடத்திற்கு வந்து தனது தந்தையை காப்பாற்ற சென்றபோது இருவரையும் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
பிள்ளைகள் கண்முன்னே அய்யனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வத்திராயிருப்பு போலீசார் கொலை செய்யப்பட்ட அய்யனாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட அய்யனாரின் தாய் பெரிய கருப்பி அளித்த புகாரின் பேரில் கொலை செய்த பெரியசாமி, அவரது சகோதரர் அழகுராஜா, கருப்பசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கொலையாளி பெரியசாமியின் வீடை போலீசார் சோதனை செய்தபோது அவர் மிருகங்களை வேட்டையாடுவதற்காக தயார் செய்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை கண்டுபிடித்தனர் அவற்றை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பள்ளி மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததை தட்டிக்கேட்ட தந்தையை ஒரு குடும்பமே சேர்ந்து கொலை செய்த சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
