காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே சாலை பகுதியில் டாஸ்மாக் எலைட் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற இளைஞர், நேற்று பிற்பகல் மதுபானம் வாங்குவதற்காக இந்தக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த டாஸ்மாக் பணியாளர்கள் பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் தர வேண்டும் என வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

​கூடுதல் விலைக்கு மதுபானம் விற்க எதிர்ப்பு தெரிவித்த பாலாஜி, “கூடுதல் பணம் தர முடியாது, தமிழக அரசு நிர்ணயித்த தொகையை மட்டுமே தருவேன்” எனக்கூறி தனது செல்போனில் வீடியோ எடுத்தவாறே ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார்.

​இதனால் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள், பாலாஜியுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், எதிர்பாராத விதமாக டாஸ்மாக் கடையின் உள்ளே பாலாஜியை இழுத்து தள்ளி கடையின் ஷட்டரை சட்டென மூடிய ஊழியர்கள், இளைஞர் பாலாஜியை கடைக்குள்ளேயே வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

​அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திடீரென கடையின் ஷட்டர் மூடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் மதுபிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதே கடையில் தான் கடந்த மூன்று வாரத்துக்கு முன்பு வாடிக்கையாளரிடம் 40 ரூபாய் அதிகமாக கேட்டு பிரச்சனை ஏற்பட்டது அந்த பிரச்சனை ஓய்வதுக்குள்ளாகவே, கடையினுள்ளே இளைஞரை இழுத்துப் போட்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை உண்டாகி உள்ளது.

​அரசு டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதாகத் தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், அதைத் தட்டிக்கேட்ட வாடிக்கையாளரை ஷட்டரைப் பூட்டித் தாக்கிய சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் ; லட்சுமி காந்தன்/ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed