ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற வீட்டுப்பட்டியல் , வீடுகள் கணக்கெடுப்பு மேற்பார்வையாளர்கள் , கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டுப்பட்டியல் , வீடுகள் கணக்கெடுப்புப் பணிக்காக மொத்தம் சுமார் 2,705 மேற்பார்வையாளர்கள் , கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கணக்கெடுப்பு நடைமுறைகள், மின்னணு செயலி பயன்பாடு, தகவல் சேகரிப்பு முறை, தரவுகளின் துல்லியம் , களப்பணியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து மூன்று கட்டங்களாக விரிவான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சியில் பங்கேற்ற மேற்பார்வையாளர்கள் , கணக்கெடுப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் தரம், கணக்கெடுப்பு நடைமுறைகள், களப்பணியில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் , தகவல் சேகரிப்பின் துல்லியம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் வீட்டுப்பட்டியல் , வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடாக, பொதுமக்கள் தாங்களாகவே தங்களது குடும்பம் , வீடு தொடர்பான விவரங்களை இணையதளத்தின் மூலம் பதிவு செய்யும் மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு ஜூலை 17 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த சுயகணக்கெடுப்பில் பொதுமக்கள் தங்களது கைபேசி எண்ணைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்நுழைந்து, குடும்பம் , வீடு தொடர்பான 34 கேள்விகளுக்கு பதிலளித்து விவரங்களை பதிவு செய்யலாம். ஒரு குடும்பத்திற்கு ஒரு கைபேசி எண்ணின் மூலம் மட்டுமே பதிவு செய்ய இயலும். பதிவு நிறைவடைந்தவுடன், 12 இலக்க அடையாள எண் குறுஞ்செய்தி வாயிலாக கைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். பின்னர், தங்களது பகுதிக்கு நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர் களப்பணிக்காக வரும்போது, அந்த 12 இலக்க அடையாள எண்ணை அவரிடம் வழங்க வேண்டும்.

இந்தப் பயிற்சியின் மூலம் கணக்கெடுப்புப் பணிகளை துல்லியமாகவும், முழுமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ள தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் சுயகணக்கெடுப்பில் ஆர்வமுடன் பங்கேற்று, உரிய காலக்கெடுவிற்குள் தங்களது விவரங்களை பதிவு செய்து, அரசின் கணக்கெடுப்புப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர்மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
