காரைக்குடியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பள்ளி நிறுவனர் நாள் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி நிறுவனர் எஸ்.பி. குமரேசன் அவர்களை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மலர்க்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பளித்து, இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவில் பள்ளியின் துணை முதல்வர் பிரேமசித்ரா வரவேற்புரை வழங்கினார்.
தொடர்ந்து பள்ளி முதல்வர், நிறுவனரின் கல்விச் சேவை, தொலைநோக்குப் பார்வை மற்றும் பள்ளியின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றி வரும் அர்ப்பணிப்பைப் பாராட்டி பிறந்தநாள் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடி, பல்வேறு கலைநிகழ்ச்சிகளை வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

நிறுவனர் நாளை முன்னிட்டு பள்ளியின் நான்கு ஹவுஸ்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அறிவுத்திறன் மற்றும் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக, நான்கு ஹவுஸ்களுக்கு இடையே நடைபெற்ற குழு நடனப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. மாணவர்களின் ஒருங்கிணைப்பு, கலைத்திறன் மற்றும் மேடை வெளிப்பாடு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. மேலும், பல்வேறு கலைத்துறைகளில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பள்ளி நிறுவனர் எஸ்.பி. குமரேசன் “வாழ்க்கையில் முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் முடியாதது எதுவுமில்லை. ஒவ்வொரு மாணவரும் உயர்ந்த இலக்கை நிர்ணயித்து, ஒழுக்கத்துடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்” என்று மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் அறிவுரைகளை வழங்கினார்.
பள்ளியின் துணைத் தலைவர் கே. அருண்குமார், ப்ரீத்தி அருண்குமார் மற்றும் சாந்தி குமரேசன் ஆகியோர் நிறுவனர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மாணவர்கள் தொடர்ந்து கல்வி, கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்க வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிறுவனர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
செய்திகள் ; ஆனந்த் / சிவகங்கை / 8939476777
