கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கம், கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் மற்றும் தமிழகத் தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு வரலாற்று எச்சங்களை கண்டறிந்து ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றன. இவ்வகையில் அண்மையில் மத்தூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் அவர்கள் அளித்த தகவலின் பேரில் போச்சம்பள்ளி வட்டம் ஒட்டப்பட்டி கிராமம் பெணுகொண்டாபுரம் ஏரிக்கரையில் சிதைந்த நிலையில் காணப்படும் ஒரு நடுகல் வீட்டில் ஒரு கல்லில் கல்வெட்டும் மறு கல்லில் நடுகல்லும் ஆய்வுசெய்யப்பட்டன. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த இந்த நடுகல் மற்றும் கல்வெட்டு குறித்து தமிழகத் தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்லவர் காலம் முதல் விஜயநகர நாயக்கர் காலம் வரையிலான ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுகற்கள் காணப்படுகின்றன. இவற்றில் சோழர்கால நடுகற்கள் சிறப்புவாய்ந்தனவாகும். ஏனெனில் இப்பகுதியில் சோழர் ஆட்சிக் குறித்து அறிந்துக்கொள்ள மிகவும் துணைநிற்பது இந்த நடுகற் கல்வெட்டுகளே ஆகும். அவ்வகையில் இதுவரை இம்மாவட்டத்தில் அனுசோனை, கங்காவரம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் சோழ மன்னன் முதலாம் இராஜேந்திரனின் நடுகல் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்நடுகல் கல்வெட்டு மூன்றாவதாகும். இக்கல்வெட்டு இராஜேந்திரனின் 24ஆம் ஆட்சியாண்டில் (பொது ஆண்டு 1036) தகடூர் நாட்டு மாதமங்கலத்து வெள்ளான் பாலன் மணியனின் மகன் மணிய கோபாலன் ஆன இராஜேந்திரசோழப் பொன்னன் என்பவன் மலை நாட்டு அயிங்குந்றத்தில் நிரை துரவை கொள்ள வந்தபோது அவனைக் கொன்று நிரை துரவைகளைக் காத்து இராஜேந்திரசோழ எயிநாடுடையான் என்னும் தலைவன் இறந்த செய்தியைக் குறிக்கிறது. நிரை என்பது கால்நடைகளையும், துரவு என்பது பெரிய கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள நிலப்பகுதியையும் குறிக்கும். எனவே இச்சண்டை ஆநிரைகளைக் கவர்தலோடு நிலப்பகுதியையும் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டதை அறிகிறோம்.
அதனால் தான் இராஜேந்திரசோழன் என்னும் பட்டப்பெயரைத் தாங்கிய எயிநாடுடையான் என்னும் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் ஒரு பகுதியை ஆண்ட குறுநிலத் தலைவனே இச்சண்டையில் ஈடுபட்டு எதிரியின் முயற்சியை தோற்கடித்து இறுதியில் தானும் இறந்துள்ளான். எதிரியான தகடூர் நாட்டு மாதமங்கலத்தை சேர்ந்த பொன்னன் என்பவனும் இராஜேந்திர சோழன் என்னும் பட்டத்தைத் தாங்கியவனே. இதிலிருந்து இப்பகுதியானது சோழர்கள் காலத்தில் அவர்களின் நேரடி ஆட்சி இல்லாமல் சோழர்களின் பட்டம் தாங்கிய பல குறுநிலத் தலைவர்களால் ஆளப்பட்டு வந்ததையும் அவர்களுக்கிடையே அவ்வப்போது பூசல்கள் இருந்துவந்ததையும் அறிகிறோம்.
இக்கல்வெட்டுக்குக் கீழே ஒரு தாங்கியின்மீது கலயமும் அதன்மீது கூம்பாய் முடியும் அடுக்குகளும் காட்டப்பட்டுள்ளது. அதை நோக்கி ஒரு பெண் செல்லும் காட்சியும் அதற்குப் பின்னால் ஒரு ஆண் தலை கவிழ்ந்து நிற்கும் குதிரையைப் பிடித்தபடியும் காட்டப்பட்டுள்ளனர். தலைவன் இறந்த பிறகு அவன் மனைவி தீக்குளித்ததை இது குறிக்கிறது.

இக்கல்வெட்டினை அடுத்து உள்ள கல்லில் இத்தலைவனின் நடுகற் சிற்பம் உள்ளது. இதில் இத்தலைவன் எதிரியின் முடியைப் பிடித்து அவன் கழுத்தை அறுப்பதுபோல் காட்டப்பட்டிருக்கிறான். அதே வேளையில் மேலிருந்து ஒரு சிறிய உருவம் தலைவனைக் குத்துவதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. மேலே இறந்த தலைவனை இரண்டு தேவமகளிர் சொர்க்கத்துக்கு தூக்கிச் செல்லும் காட்சி உள்ளது. கல்லின் வலது புறத்தில் சிறிய அளவில் பெண்ணுருவம் ஒரு மண்டபத்துள் நின்று எரியும் தீச்சுடரை நோக்கி வணங்குவதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. இதன் மேல்புறம் இருவர் பல்லக்கு தூக்கிச் செல்லும் காட்சி உள்ளது. அருகில் இரண்டு நீண்ட கொடி போன்ற கம்பங்கள் உள்ளன. இவை யாவும் இறந்தவன் ஒரு தலைவன் என்பதைக் குறிக்கின்றன.
எனவே இந்த நடுகல் மற்றும் கல்வெட்டு ஆகியவை இப்பகுதியின் வரலாற்றை குறிப்பாக 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் இப்பகுதியானது பல குறுநிலத் தலைவர்களால் ஆளப்பட்டு வந்ததும் அவர்களுக்கிடையே அவ்வப்போது தனது எல்லையை விரிவாக்கிக் கொள்ளவும் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளவும் சண்டைகள் நிகழ்ந்து வந்ததும் தெரியவருகிறது என்றார்.

இந்த ஆய்வின்போது இக்கல்வெட்டினைக் கண்டறிந்த ஆறுமுகம், கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவக்குமார், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்க செயலர் தமிழ் செல்வன், துணை செயலர் பாலாஜி மற்றும் ஊர் மக்கள் உடனிருந்தனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
