கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி (24.05.2026) அன்று ஈரோடு மாவட்டம், பவானி சாலை, அசோகபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள், புத்தகப்பை, கணித உபகரணபெட்டி, வண்ணபென்சில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி வருகின்றது.

அந்த வகையில், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி வருகின்ற ஜுன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி அசோகபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான சீருடைகள் பதனிடும் பணியினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையானது 6.7.1973-ல் பதிவு செய்யப்பட்டு 5.9.1973 முதல் செயல்பட்டு வருகிறது. இவ்வாலையில் துணி வெளுத்தல், சாயமிடல், மெருகேற்றல், அச்சிடல் போன்ற பல்வேறு பதனிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆலையின் துணிகள் பதனிடும் திறன் (நாள் ஒன்றுக்கு 1,25,000 மீட்டர்கள் x 26 நாட்கள்) மாதம் ஒன்றிற்கு 32.50 இலட்சம் மீட்டர் ஆகும்.

தமிழ்நாடு அரசின் சீருடை திட்டம் கல்வி ஆண்டு 2026 2027 ன் கீழ் ஆலைக்கு 1.39 கோடி மீட்டர் துணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 1.30 கோடி மீட்டர் கிரே துணிகள் ஆலைக்கு வரப்பெற்று 1.12 கோடி மீட்டர் துணிகள் பதனிடப்பட்டுள்ளது. மீதமுள்ள துணிகள் பதனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு முகமை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் இந்த ஆய்வின் போது ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கா.க.ஆனந்த் மோகன் , ஆலையின் செயலாட்சியர் சிவகுமார், துணை இயக்குநர் மற்றும் ஈரோடு சரக கைத்தறி உதவி இயக்குநர் பெ.சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தார்கள்.

ஈரோடு செய்தியாளர் : கோபாலகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed