உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு மையக்கூட்டம் டால்பின் சமுதாயக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்திற்கு, பொதுச் செயலாளர் மனோகரன் சாமுவேல் மற்றும் தொழிலதிபர் டி.ஏ.எஸ்.ஆர். தோத்தாத்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி பொறுப்பாளர் ஜெபக்கனி இறை வணக்கம் பாடினார். வந்திருந்த அனைவரையும் செயலாளர் டி. நாராயணன் வரவேற்றார்.

நிகழ்வில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் வி. குமார், வட்ட வழங்கல் அலுவலர் ஆர். நிர்மல் குமார், வழக்கறிஞர் ஆர். ராஜேந்திரன், டால்பின் கல்லூரி முருகதாசன் ஆகியோர் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்துப் பேசினார்கள். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணையில் பாதிக்குப் பாதி கலப்படம் உள்ளது என்பதையும், நல்லெண்ணையில், பாமாயில் கலந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா முழுக்க விற்கப்படுவதாகவும், அதைப் பயன்படுத்தினால் மக்களுக்கு கடும் இருதய நோய் வருவதாகவும், அதை மக்கள் தவிர்ப்பது குறித்தும் வழக்கறிஞரும், எழுத்தாளருமான எஸ். ரமேஷ் பேசினார். நுகர்வோர் மையத்தின் பொதுச் செயலாளரான எஸ். சாமுவேல் மனோகரன், நுகர்வோர் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய துறைகள் அனைத்தையும் பட்டியலிட்டார்.

நெடுஞ்சாலைத்துறையின் வேகத்தடுப்புகள், மக்களைக் கடிக்கும் தெரு நாய்கள், நகராட்சிக் குளங்களில் ஆகாயத்தாமரை படர்ந்திருப்பது, மின்சாரத்துறையின் சேவைக்குறைபாடுகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களுக்கு அதிக விலை, கூட்டுறவு வங்கிகள், ஓட்டல் பண்டங்களில் கலப்படம், சுகாதாரமற்ற சாலையோரக்கடைகள் ஆகியவை குறித்து நுகர்வோர் கொள்ள வேண்டிய விழிப்புணர்வை அவர் வலியுறுத்தினார். கூட்டத்தில், தர்ம கிருஷ்ண ராஜா, எஸ். லட்சுமணசாமி, மருத்துவர் சீனிவாசன், பத்திர எழுத்தர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில், டி. நாராயணன், வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்திகள் : சுந்தரராஜன் & சிவன்ராஜ் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed