விசில், இது பலதரப்பு மக்களுடைய பயன்பாட்டில் இருக்க கூடிய ஒரு பொருள், பல இடங்களில், பல சூழ்நிலைகளில் இது அத்தியாசமான, மிக அவசிய காலகட்டங்களில் ஒரு ஒலி எழுப்பும் கருவியாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக, ராணுவம், காவல்துறை, உட்பட மாணவர்கள் வரை பெரும் திரளாக அணிவகுப்புகள் நடத்தும் போதும், மற்றும் கூட்ட நெரிசல்களில் ஒரே நேரத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து கூடியிருக்க கூடிய கூட்டத்தினரை ஒழுங்கு படுத்துவதற்கும், வழி நடத்துவதற்கும், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பகுதிகளில் காவல் பணிகள் மற்றும் அவசரக்கால பணிகள், பேரிடர் பணிகள், போன்றவைகளில் இந்த விசிலின் பயன்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒலி எழுப்பும் கருவியான விசில், இன்று மக்களிடம் ஒரு அத்தியாயமான பொருளாகவும், அவசியம் தேவை படக்கூடிய பொருளாகவும், இருந்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு அவசிய பொருள் தான், இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் தடை விதிக்கப்பட கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம், இன்று தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசு பொருளாக இந்த விசில் நிலவுகிறது. தமிழ்நாட்டில் அரசியலில் புதியதாக கட்சி துவங்கி இருக்கும் நடிகர் விஜய், வருக்கிற ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சி சின்னமாக விசிலை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற்றிருக்கிறார். அதனால், அந்த கட்சியினர், தலைமை முதல் கடைநிலை தொண்டர்கள் வரை மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர். அதை கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நம்மிடம் ஒரு பழமொழி வழக்கத்தில் உள்ளது, சும்மாவே ஆடிக்கொண்டிருக்கும் காலுக்கு, சலங்கை கட்டி விட்டால் எப்படி இருக்கும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதே போல், ஏற்கனவே நடிகர் விஜயின் கட்சி தொண்டர்கள் பெரும்பாலும், பக்குவப்படாமலும், எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் இருக்க கூடிய அப்பாவி இளைஞர் பட்டாளம் என்ற ஒரு பொது கருத்து மக்களிடையே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட கூட்டத்திற்கு இந்த விசில் சின்னம் கிடைத்தவுடன் அவர்களுடைய அளப்பறைகளுக்கு அளவே இல்லாமல் போய்விடும் என்பது எல்லாருடைய எதிர்பார்ப்பாக்கவும் அமைந்தது.

இந்த சூழ்நிலையில் தான் தற்போது சென்னை கிரிக்கெட் மைதானத்தில் விசில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மாநகராட்சி முதல் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் வரை துப்புரவு பணியை மேற்கொள்ளும் தூய்மை காவலர்கள் இந்த விசிலை தான் பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கும் தற்போது பல இடங்களில் விசிலை பயன்படுத்த கூடாது என வாய்மொழி உத்தரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்படி, விசிலுக்கு தடை விதிப்பது ஏற்புடையதாக இல்லை, அப்படி தொடர்ந்து தடை விதித்தால் அது அவர்களுக்கு சாதகமாக முடியும் என்பதையும் உணர வேண்டும். அப்படி தடை விதிக்க வேண்டும் என்றால் தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் ஆணையமே தடை விதிப்பதில் தவறில்லை, அந்த தடையை மக்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால், தற்போது கிரிக்கெட் மைதானத்தில் விசில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடையை விதித்தது நாங்கள் இல்லை என, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வரை இந்த தடைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அறிவித்திருக்கிறார்கள். சென்னை காவல்துறை தான் கிரிக்கெட் மைதானத்தில் விசில் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. இதுவும் ஒரு தவறான செயல்தான்.

ஏனென்றால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சென்னை சூப்பர் சிங்ஸ் அணியிரை உற்சாகப்படுத்தும் விதமாக, விசில் போடு என்ற ஒரு முக்கிய வாசகம் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான், இது இன்றைய இளைஞர்களிடம் மிகவும் முக்கியமான ஒரு நிலைப்பாடாக இருந்து வருகிறது, என்பதையும் உணர வேண்டும்.

தேர்தல் களத்தில் விசில் சின்னம் என்பது இதுவரை நிரந்தர சின்னம் கிடையாது, என்பது பலருக்கும் நன்றாக தெரியும். சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட கூடியவர்கள் அவர்கள் விரும்பி கேட்டால், அந்த விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யும். அதற்கு உதாரணம் கூற வேண்டும் என்றால், ஏற்கனவே கர்நாடகத்தில் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜும், தமிழ்நாட்டில் போட்டியிட்ட நடிகர் மயில்சாமியும் சுயேட்சையாக போட்டிடும் தங்களுக்கு இந்த விசில் சின்னம் வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு கேட்டு பெற்று இருக்கிறார்கள். அதேபோல தான், த.வெ.க கட்சி சார்பிலும், இந்த சின்னம் தமிழ்நாட்டில் பொதுவான சின்னமாக தங்களுக்கு வேண்டும் என கேட்டு பெற்று இருக்கிறார்கள்.

ஒரு கட்சியின் தேர்தல் சின்னம் என்பது தங்களுடைய கட்சிகளின் கொள்கையை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதைவிட, மக்களுக்கு நன்கு அறிமுகமான சின்னமாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்போது பெரும்பாலான கட்சிகளுடைய எண்ண ஓட்டமாக உள்ளது. அதை போல நினைத்து தான் விஜய் கட்சியினரும் இந்த சின்னத்தை பெற்று இருக்கிறார்கள். ஆகவே, தவெக கட்சியின் விசில் சின்னத்தை அனைத்து கட்சிகளும் விமர்சித்து பேசினாலும், தவெக தங்களுடைய முக்கிய எதிர்க்கட்சி என்று அறிவித்திருக்கும் திமுக, இந்த விசில் சின்னத்தின் பிரச்சனையை சிறிது தவிர்த்து விட்டு பயணிப்பது நல்லது. அப்படி, இன்று காவல்துறை விதிக்க கூடிய தடையை மேலும் இறுக்கினால், அது மேலும் அவர்களுக்கு சாதமாகத்தான் போகும், அதை வைத்தும் அவர்கள் அரசியல் பேசி மகிழ்வார்கள்.

தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையம் சுவர்களில் வரைந்திருக்கும் சின்னங்களை சுண்ணாம்புகள் தடவி அழிப்பதும், தடுப்புகள் ஏற்படுத்தி மறைப்பதும் வாடிக்கைதான், ஆனால், அதே தேர்தல் ஆணையம் உதயசூரியன் சின்னத்தையும், இரட்டை இலை சின்னத்தையும், சுவர்களில் வரைந்து இருப்பதையும், தெருக்களில் நிறுவப்பட்டிருக்கும் சின்னங்களையும் அழிக்கவும், மறைக்கவும் முடியும் ஆனால், இயற்கையாக மேலிருக்கும் சூரியனையும், மரங்களில் இருக்கும் இலைகளையும் மறைக்க முடியாது அல்லவா, அதேபோல் நினைத்து கொண்டு, இந்த விசில் சத்தத்திற்கு தடை விதிப்பதை விட்டுவிட்டால், அந்த கட்சியினர் ஊரெங்கும், தெருவெங்கும் ஊதும் சத்தம், மக்களை எரிச்சல் அடைய செய்து, மக்களே அவர்களுடைய விசில் சத்தத்திற்கு கட்டுப்பாடு விதிப்பார்கள், அப்படி அவர்கள் கட்டுப்படவில்லை என்றால், அந்த சத்தத்தை கட்டுப்படுத்த மக்களே முடிவு எடுத்து கொள்ளட்டுமே, அதை அதை, அதன் போக்கிலேயே, விட்டு விடுவது அனைவருக்கும் நல்லது…

P.G.பாலகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed