பரமகுடியில், 25 வருடங்களுக்கு மேலாக எந்தவொரு அடிப்படை வசதிகளும் கிடைக்காத சோமநாதபுரம் மக்கள் “ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லையே … ” என புலம்பி தவிக்கும் மக்கள், இப் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, வாறுகால், தெரு விளக்குகள் அமைப்பதில் தற்போதைய தமிழ்நாடு அரசு மாநகரங்கள் , பெரு நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதி மக்களும் எந்தவொரு மனச் சஞ்சலமும் அடையக் கூடாதென எண்ணி
” நாளொரு மேனியும் … பொழுதொரு வண்ணமுமாக … ” பற்பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றனர்.

இந் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் அமைந்துள்ள புறநகர் பகுதியான சோமநாதபுரம் பகுதியாகும். இப்பகுதி தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது. இப்பகுதி மக்களுக்கு கடந்த 25 வருடங்களுக்கு மேலாகியும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படாததால் ஏங்கி தவித்து, புலம்பி வருகின்றனர்.
இது சம்மந்தமாக சோமநாதபுரம் பகுதி மக்கள் புலம்பி தவித்ததுடன், தங்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் இன்னல்களை ஆக்ரோஷமாக கூறியதாவது : ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு பாத்தியப்பட்ட தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியாகும். பரமக்குடி புறநகர் பகுதியாகவும் விளங்குகிறது.
இப்பகுதியில், கடந்த 25 வருடங்களுக்கு முன்பு ” ஸ்ரீ முத்தாலம்மன் பாலிடெக்னிக் ” கல்வி நிறுவனம் நிறுவப்பட்டு மாணவர் – மாணவியர்கள் வந்து தொழிற்கல்வி பயின்று சென்று வருகின்றனர். மேலும், கடந்த 4 ஆண்டுகளாக அந்த வளாகத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் மகளிர் கலை கல்லூரியும் துவக்கப்பட்டு திறம்பட செயல்பட்டு வருவதால் சுற்றுப்புற கிராம மகளிர்கள் திரளாக வந்து செல்கின்றனர்.
இதனால், இப்பகுதியில் , நெசவாளர்கள் குடும்பங்களும் நிறைந்து வந்த போதிலும், காலம் செல்ல … செல்ல … ஆசிரிய பெருமக்கள், அலுவலக பெருமக்கள் கனி, மீனாட்சி, வ.உ.சி. நிலா, ஓம் சக்தி , திரு நகர் என பல்வேறு நகர்கள் உருவாக்கப்பட்டு, சுமார் 2,750 -க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பு மக்களும் சொந்தமாக வீடு கட்டி கடந்த 25 – வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம்.

ஆனால், எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி, வாறுகால் வசதி, தெரு விளக்குகள் அமைக்காமல் செம்மண் சாலை, சரளி சாலை, சிறு … சிறு … கற்கள் சாலைகளை அமைத்து சென்று வருகிறோம்.
மேலும், மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி தெப்பக்குளம் போன்று காட்சியளிப்பதால் பள்ளி – கல்லூரிகளுக்கு செல்லும் எங்கள் குழந்தைகள் , அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்கள், காய்கறி மார்க்கெட் செல்லும் நாங்களும் அவஸ்தையடைவதுடன், மழைநீர் சூழ்ந்துள்ளதால், விஷபாம்புகள் போன்ற பல விஷ தந்துகளின் நடமாட்டங்கள் இப்பகுதியில் அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சத்துடன் செல்ல கூடிய அவலநிலையாக உள்ளது. நோய் தொற்றுகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது.

” ஆட்சிகள் தான் மாறுகின்றன… காட்சிகள் என்னவோ … அப்படியே தான் உள்ளது. தேர்தல் வரும் காலங்களில் மட்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அதைச் செய்கிறோம் … இதைச் செய்கிறோம் … என எங்களை நம்ப வைக்கும் அளவிற்கு வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசி செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
எங்களது அவல நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், தொகுதி மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதாக கூறிக் கொண்டு செயல்படும் மக்கள் பிரதிநிதிகளும் போர்க்கால நடவடிக்கை எடுத்து மழைக்காலம் வருவதற்குள் சாலை வசதி, வாறுகால் வசதி, தெரு விளக்குகளை சோமநாதபுரம் பகுதியில் உள்ள அனைத்து நகர் பகுதிகளுக்கும் அமைத்து எங்களை சுபிட்சமாக வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டுமென ஆதங்கத்துடன் ஆக்ரோஷமாக … கூறினர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
