“பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழிப்புணர்வு நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒருவரான “ஒசை” காளிதாசன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முழுநேரப் பணியாக மேற்கொள்வதற்காக தனது வங்கிப் பணியைத் துறந்தவர். தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரியத்தின் முன்னாள் உறுப்பினராகப் பணியாற்றிய அவர், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர் வளத்தைப் பாதுகாக்க கேரளா, கர்நாடகா மற்றும் கோவா மாநில சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து தேசிய அளவில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.

காடுகள், நீர்நிலைகள், யானைகள், பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதே மனிதகுலத்தின் நிலையான எதிர்காலத்திற்கு அடிப்படை என்பதை வலியுறுத்தி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு பொதுமேடைகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், “ஒசை” காளிதாசன் திருச்சிக்கு வருகை தந்தபோது, தண்ணீர் அமைப்பு சார்பில் செயல் தலைவர் கே.சி. நீலமேகம், செயலாளர் பேராசிரியர் கி. சதீஸ்குமார், எக்ஸ்னோரா பாலசுப்ரமணியன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார் ஆகியோர் நேரில் சந்தித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்கும் வழிமுறைகள் மற்றும் பொதுமக்களின் பங்கு குறித்து கலந்துரையாடினர்.
அப்போது, “பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” என்ற விழிப்புணர்வு செய்தியை வலியுறுத்தும் வகையில் ஒசை காளிதாசன் அவர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து, அனைவரும் துணிப்பைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் வலியுறுத்தப்பட்டது. மனித வாழ்வையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு செய்தியும் பகிரப்பட்டது.

செய்திகள் ; விஜயகுமார் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed