சேலம் மாவட்டம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா, “இது நம்ம ஆட்டம் 2026” மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி, சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், துணை மேயர் சாரதாதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில், முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா “இது நம்ம ஆட்டம் 2026” வட்டார அளவிலான போட்டிகள் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2026 ஜனவரி 25 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றனர்.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று (ஜனவரி 30) தடகளம் 100 மீட்டர், குண்டெறிதல், கேரம் (இரட்டையர்) கபடி, கயிறு இழுத்தல் ஆண்கள் மற்றும் பெண்கள் த்ரோ பால் (பெண்கள்) ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டியினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

நாளை (31ம் தேதி) கிரிக்கெட் (ஆண்கள்), வாலிபால் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஓவிய போட்டிகள், மாற்று திறனாளிகளுக்கான 100 மீட்டர் தடகளம், குண்டு எறிதல், கோலப் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.6,000, ரூ.4,000, ரூ.2,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து 9,314 ஆண்களும், 6,522 பெண்களும் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் செய்தியாளர்
கா.தங்கதுரை 9442979467 / 8939476777
