புதிய தமிழகம், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.ஆர். சுதன் கோரிக்கை!
நிலச்சுவான்தாரர்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் செயல்படும் விவசாய சங்கத்தினருக்கு கண்டனம்!
புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் செயலாளர் ‘எல்லைப் பறவை’ என்.ஆர். சுதன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா தென்திருப்பேரை பேரூராட்சி மேலக்கல்லாம்பாறை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் ‘நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்’ அமைத்திட கோரிக்கை வைத்து பலமுறை புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசுக்கு பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய செயல் பெரும்பான்மை மக்களான விவசாயிகளை புறக்கணிக்கும் செயலாக புதிய தமிழகம் கருதுகிறது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு இடங்களில் கொட்டகை வசதியுடன் “நிரந்தர கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் நெல் நனையாமல் பாதுகாக்க வேண்டும்” என இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் உண்மையான விவசாயச் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
கடந்த ஆண்டு தென்திருப்பேரை, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், பெருங்குளம் போன்ற பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூடைகள் நனைந்து, சகதியாகி சிறு குறு விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாயினர். எனவே விவசாயத்தையே நம்பி வாழும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அறுவடை காலம் தொடங்கும் முன்பே அரசுக்கு சொந்தமான இடங்களில் பாதுகாப்பான நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.
குறிப்பாக தென்திருப்பேரை பேரூராட்சி கடம்பாகுளம் பாசன கிராம விவசாயிகளுக்காக மேலகல்லாம்பாறை பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட அரசை வலியுறுத்தி கடந்த 18.09.2025 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், 30.10.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளரிடமும் (வேளாண்மை), 02.03.2026 அன்று ஏரல் வட்டாச்சியருக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன.
இவை அனைத்தும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. இந்நிலையில் நிலசுவான்தாரர்களுக்கு ஆதரவாக சில விவசாயிகள், போலியான விவசாயச் சங்கங்களை ஆரம்பித்து அதன் மூலம் கடம்பாகுளம் பாசனத்திற்கு உட்பட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான “நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் தென்திருப்பேரை பேரூராட்சி மேலகல்லாம்பாறை கிராமத்தில் வரவிடாமல்” நிலச்சுவான்தாரர்களால் இயக்கப்பட்டு வரும் விவசாயச் சங்கத்தினர் தடுத்து வருகின்றனர். இந்த கயவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் என்.ஆர். சுதன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி.இன் / நெல்லை
கைப்பேசி எண்: 8825850212

