தமிழ்நாட்டிற்கு, 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல் இல்லாமல் தற்போது கோடை காலத்தில் கூட குடிநீருக்கு பிரச்சினை இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. ஆனால், கோடை காலம் முடிந்ததும் ஜூன் மாதம் தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை பற்றி பேசாத வாய் இருக்காது. அதற்கு காரணம் கர்நாடகா அரசு காவிரியில் ஆண்டுதோறும், ஜூன் 12ம் தேதி தமிழ்நாட்டு பாசன வசதிக்காக நீரை திறந்து விட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், சில சமயங்களில் அந்த குறிப்பிட்ட நாளில் காவிரியில் தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா அரசு போர் கொடி தூக்குவதால் தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனையை மையமாக வைத்து இங்குள்ள அரசியல்வாதிகள் அரசியல் செய்வது வாடிக்கையாக இருந்து வருவது வழக்கம், அதேபோல தான் இந்த ஆண்டும் ஜூன் 12 ம் தேதி பாசனத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால், தமிழ்நாட்டு அரசியலிலும் பலவிதமான நாடகங்கள் அரங்கேரி கொண்டு இருக்கின்றன.

இந்திய அளவில் தமிழ்நாடு எப்போதும் தனித்துவமான செயல்பாடுகளை கொண்டது. அது கலை, இலக்கியம், கலாச்சார நிகழ்வுகள், சொற்பொழிவுகள், ஆன்மீகம், அரசியல் செயல்பாடுகள் என எதை எடுத்து கொண்டாலும் தனித்துவமான கொள்கைகளையும், செயல்பாடுகளையும் கொண்டு தமிழர்கள் வாழக்கூடியவர்கள் என்பது உலகறிந்த ஒரு விஷயம்.

ஆனால், சமீப காலங்களாக தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய பல விஷயங்கள் உலக அளவில் தமிழர்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு காரணம், தரம் தாழ்ந்த மதவாத அரசியல் செயல்பாடுகள், மற்றும் சாதி வெறியை இளைஞர்கள் மத்தியில் தூண்டிவிடும் வகைகள் நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகள். குறிப்பாக, ஆணவப் படுகொலை போன்ற சம்பவங்களில் கையாலாகாத சாதி கட்சி தலைவர்களின் தூண்டுதல்களால் இளைஞர்களே நேரடியாக களத்தில் இருப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டிருந்தன. அந்த வகையில் தற்போது திராவிடக் கொள்கையை பேசி வரக்கூடிய சில அரசியல் கட்சிகள் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும், சேர்ந்து கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் திராவிடக் கொள்கையை அடித்தளமாக கொண்டு இயங்கிய நீதி கட்சி காலத்தில் துவங்கிய மேடைப்பேச்சு களம் படிப்படியாக வளர்ச்சி பெற்று பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோர் காலங்களில் மேடைப்பேச்சு மக்களின் முக்கிய அரசியல் களமாக மாறியது. இவர்களுடைய மேடைப்பேச்சுகளை கேட்பதற்காகவே இரவென்றும் பாராமல், பனி, மழை என்றும் பாராமல் இரண்டு, மூன்று மணி நேரம் கூட காத்திருந்து அவருடைய பேச்சுக்களை மக்கள் ரசித்த காலம் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலுக்குள் நுழைந்த பிறகு அவர்களை ஏளனம் செய்யவும், நையாண்டி செய்யவும், அரசியல் மேடைகளில் பேச்சுக்களின் பாதை மாறியது. சிலேடை பேச்சுக்கள் என்ற ஒரு பேச்சு வழக்கு மேடைப்பேச்சுகளில் புகுந்தது. அதன் மூலம் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளை முக்கிய பெரும் தலைவர்களே பயன்படுத்தக்கூடிய சூழலும் இருந்து வந்தது. மேலும், அப்படிப்பட்ட பேச்சுக்களை தலைவர்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் தலைமைக் கழக பேச்சாளர்கள் என்ற முத்திரையில் பல பேச்சாளர்கள் இரண்டு தரப்பிலிருந்தும் மேடைகளில் காதை மூடிக்கொள்ளும் அளவிற்கு பேசக்கூடிய சூழல் இருந்து வந்தது.

இப்படிப்பட்ட இரட்டை அர்த்த மேடைப் பேச்சுக்களை முழுமையாக எதிர்த்ததும், அதை முழுமையாக மேடைப் பேச்சுகளில் இருந்து அப்புறப்படுத்த செய்ததும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான், அவர் கட்சிக்கு தலைமையேற்ற பிறகு இரட்டை அர்த்தத்தில் பேசக்கூடிய மேடை பேச்சாளர்களை கண்டிக்கத் தொடங்கினார். குறிப்பாக நடிகர் ராதாரவி, சிவாஜிலிங்கம் போன்ற தலைமை கழக பேச்சாளர்களையே கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல் அவருடைய மேடைப் பேச்சும் மிகவும் நாகரிகமாக இருக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கூட கலைஞரையும், திமுகவில் உள்ள மற்ற கட்சி தலைவர்களையும் வசைப்பாடுபவரே தவிர, அவர் இறுதி காலம் வரை ஸ்டாலின் அவர்களை ஒரு வார்த்தை கூட தரம் தாழ்த்தி பேசியதே கிடையாது. அதற்கு காரணம் இவருடைய நாகரீகமான பேச்சுக்களும் பழக்க, வழக்கங்கள் தான், மேலும், ஜெயலலிதா அவர்களுடைய மறைவிற்குப் பிறகு திமுக, அதிமுக இரண்டு கட்சிகளில் உள்ள தலைமை நிர்வாகிகள் முதல் கடை நிலை தொண்டர்கள் வரை சுக – துக்க நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொள்வதும் உரையாடுவதும் என்ற ஆரோக்கியமான அரசியல் நிகழ்வுகளை காண முடிந்தது.

ஆனால், தற்போது தமிழக அரசியலில் மீண்டும் அநாகரீக பேச்சுக்களும், செயல்பாடுகளும் அரங்கேரி வருகின்றன. அது சென்ற சட்டமன்றத் தேர்தலில் இருந்து துவங்கி விட்டது. குறிப்பாக, அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல இடங்களில் திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களையும் அந்த கட்சிக்காரர்களையும் பல இடங்களில் தரம் தாழ்த்தி பேசி இருக்கிறார். அதற்கு பதிலாக திமுக தரப்பில் இருந்தும் தனிமனித தாக்குதல்கள் பேச்சு மேடைப்பேச்சுகளில் அரங்கேரி வந்து கொண்டிருந்தது.

ஆனால், தற்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டு தரப்பினர்களும் தொண்டர்களை போர்க்களத்திற்கு அனுப்புவது போல் தூண்டிவிடும் வகையில் பேசிக் கொண்டிருப்பது நாகரீகமாக காணப்படவில்லை. குறிப்பாக, முதல்வர் விஜய் அவர்கள் சபை விதிமுறைகளை மீறி சட்டசபையில் சைகை மொழியில் பேசியதும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவர்கள் காவேரி நீர் பிரச்சனைக்காக தஞ்சாவூரில் விவசாயிகள் முன்னிலையில் நடக்கக்கூடிய கூட்டத்தில் பேசிய பேச்சுக்களும், தமிழக மக்களிடையே அருவருப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்களுடைய இந்த பேச்சுக்களை அவர்கள் தரப்பில் இருக்கக்கூடிய கட்சிக்காரர்கள் வேண்டுமானால் ரசிக்கலாம், ஆனால் நடுநிலையில் இருக்கக்கூடிய பொதுமக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு வாய்ப்பில்லை. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்களுடைய பேச்சை முன்னாள் முதல்வரும் அவருடைய தந்தையுமான ஸ்டாலின் அவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதுதான் உண்மை.

அதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்களுடைய அந்த இரட்டை அர்த்த சிலேடை பேச்சுக்காக, அவர் மீது ஒரு அவதூறு வழக்கு தோடுத்து விட்டு, இனி எங்களுடைய ஆட்சி காலத்தில் யாராவது இப்படி பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசினால், நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என கூறிவிட்டு, அடுத்த வேலையை பார்த்து இருக்கலாம், ஆனால் அதை விட்டுவிட்டு, முதல்வருக்கு தலைக்கு மேலே இருக்கும் பல வேலைகளை புறம் தள்ளிவிட்டு, உதயநிதியை கைது செய்ய வேண்டும் என தனது கட்சிக்காரர்களை விட்டு ஆர்ப்பாட்டம் செய்ய சொன்னதும், அதனை தொடர்ந்து கைது செய்ததும், காவிரி நீர் பிரச்சினையை ஒட்டுமொத்தமாக தமிழக மக்களை மறக்கடிக்க செய்ய வேண்டும் என்று அரங்கேற்றிய நாடகமாகவே கருதத் தோன்றுகிறது.

இந்நிலையில், இனி வருங்காலங்களில் தமிழக அரசியல் மிகவும் நாகரிகமாக செல்ல வேண்டும் என்பது அனைத்து தமிழ் மக்களுடைய எண்ணமாக இருந்து வருகிறது. அதை நடைமுறைப்படுத்தினால் உலக அளவில் தமிழர்களுக்கு தலை குனிவை ஏற்படாது. மேலும், தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்கும் வடக்கே உள்ள அரசியல்வாதிகள் கொட்டத்தை அடக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் கெடுதல் விளைவிக்க கூடிய எந்த ஒரு சட்ட திட்டத்தையும் அரங்கேற்ற விடாமல் வலிமையுடன் எதிர்க்கலாம், அதற்கு ஒரே தீர்வு தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி எதுவாக இருந்தாலும், எதிர்க்கட்சி எதுவாக இருந்தாலும், ஒரே திராவிட கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் ஒரே மன நிலையில் வடக்கே உள்ள அரசியல்வாதிகளை எதிர்த்து நிற்க ஒன்றாக கரம் கோர்த்து நிற்க வேண்டும் என தமிழ்நாட்டில் வாழும் மக்கள் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை.

கட்டுரை ; P.G.பாலகிருஷ்ணன் / ஆசிரியர், எதிரொலி.இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed