தமிழ்நாட்டில், பால் வளத்துறை, மீன்வளத்துறை என அவைகளுக்கு தனி துறை இருப்பதை போல், தமிழ்நாட்டில் பனை தொழிலை மீட்கவும், பனைத் தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், பனைவளத்துறை என்ற தனித்துறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்…

தமிழ்நாட்டில், தமிழக அரசு கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்றும் அதன் மூலம் பனைத் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும் ஒரு சில கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கையின் உள்நோக்கம் புரிந்து கொள்ளாத சில சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு ஆதரவாக நின்று தமிழ்நாட்டில் கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் இருக்கக்கூடிய உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டில் கள்ளுக்கடையை திறப்பதால், பனை தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடையாது, என்பது தான் உண்மை.

தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்க கூடிய பனைமரம், உலக அளவில் தமிழ்நாட்டின் அடையாளம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இந்த பனை மரங்கள் தமிழர்களுடைய வாழ்வியலில் ஒன்றிப்போய் இருந்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் தமிழர்களுக்கு நிரந்தர பொருளாதார வருவாய் கொடுக்க கூடிய அட்சய பாத்திரமாகவும் பனைமரம் இருந்திருக்கிறது. பனைமரத்தில் இருந்து அதிக வருவாய் பெற்று பயனடைந்த மக்களிடம் இருந்து ஆட்சியாளர்கள் வரி வசூல் செய்த காலமெல்லாம் இருந்திருக்கிறது.

அப்படிப்பட்ட பனை மரத்தை கடந்த 39 ஆண்டுகளுக்கு முன்பு அழித்தொழிக்க வேண்டும் என்று, தமிழகம் முழுவதும் சாராயம் காய்ச்சும் ஆலைகள் நடத்தியும், சாராய வியாபாரம் செய்து கொண்டும் இருந்த பெரும் முதலாளிகள் சிலர் திட்டமிட்டனர். சாராயக்கடைகளை கிராமங்களிலும் திறந்து அதிக அளவில் கொள்ளை இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கிராமங்களில் விற்பனை செய்யக்கூடிய கள்ளில் போதை மருந்துகள் கலக்கப்படுகின்றன எனவும், அதனால் கிராம மக்களுடைய உயிருக்கும், உடல் நலத்திற்கும் கேடு எனவும், அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களிடம் விளக்கம் அளித்து அவரை மூளை சலவை செய்து, தமிழகத்திற்கு பல நன்மைகளை செய்த அவரை கொண்டே கடந்த 39 ஆண்டுகளுக்கு முன்பு, 1987 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ” பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்வதற்கும், விற்பனை செய்யும் கள்ளை வாங்கி குடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.”

ஆனால், பனை மரங்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள் தாங்களாகவே கள் இறக்கி குடிப்பதற்கு தடை இல்லை, என தமிழக அரசு உத்தரவிடப்பட்டது. அதேபோல் பனை மரத்திலிருந்து பதநீர் இறக்குவதற்கும், பதநீரை மூலப்பொருளாக கொண்டு உற்பத்தி செய்யக்கூடிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அனைத்தும் செய்வதற்கும் எந்த விதமான தடையையும் அரசு விதிக்கவில்லை,

ஆனால், தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் மட்டுமே இருந்த சாராயக்கடை கிராமப்புறங்களிலும் வந்து தடை இன்றி விற்பனையாக வேண்டும் என்ற
காரணத்திற்காக,
பனைத் தொழிலாளர்களை பனை மரத்திலிருந்து பதநீர் இறக்குவதற்கு கூட அனுமதிக்காமல் கள் இறக்கிறார்கள் எனக் கூறி காவல்துறையின் மூலம், பனைத் தொழிலாளர்களை பனையின் பக்கமே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி பல பொய் வழக்குகளை போட்டு துன்புறுத்தப்பட்டனர்.

போலீசாரின் அடக்குமுறைக்கு பயந்து போய் பலர் அந்த தொழிலையே மறந்து விட்டு நகர்புறங்களுக்கு கூலி வேலைக்கு செல்ல துவங்கி விட்டனர். பலர் விரைந்து தொழிலும் தெரியாததால் பல தொழிற்சாலைகளுக்கும், நகர்புற குடியிருப்புகள் பகுதிக்கு இரவு காவலர்கள் பணிக்கும் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுவிட்டது.

இந் நிலையில் தான், தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுபானங்களின் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயை கொண்டு மக்களுக்கு நல திட்டங்களை வாரி வழங்கி வருகிறார்கள், அதில் சிறிது குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களை மது விற்பனைக்கு எதிரானவர்கள் என காட்டிக்கொள்ளும் விதமாக,

மதுபானத்தை வைத்தும்,
பனை மரங்களை வைத்தும் தமிழ்நாட்டில் ஒரு பெரிய அரசியல் கூத்தை அரங்கேறி வருகிறார்கள். அதில், குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்ற ஆண்டு ” பனை மரத்தில் தானே ஏறி, கள் இறக்கும் போராட்டம் நடத்தினார். கள் கடைகளை மூடிய எம்ஜிஆர், கள் விற்பனை செய்ய கூடாது, என்று தான் கட்டுப்பாடு விதித்து இருக்கிறார்.

ஆனால், சொந்த பனை மரங்களில் ஏறி, கள் இறக்கி குடிப்பதற்கு தடையில்லை என்ற உத்தரவை பயன்படுத்தி, போலீசார் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதை உணர்ந்து, இந்த போராட்ட நாடகத்தை சீமான் அரங்கேற்றினார். இதன் மூலம் தமிழ்நாடு அரசிற்கு எதிராக செயல்படுவதாக நாடகம் தான் நடத்தினாரே தவிர, இதனால் பனைமரத் தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடையாது.

பனை மர தொழிலாளர்களுக்கு உண்மையிலேயே உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள், தமிழ்நாட்டில் பால்வளத்துறை, மீன்வளத்துறை என்று இருப்பதை போல், பனைவளத்துறை என்ற தனித்துறையை தமிழக அரசு நிறுவ வேண்டும். அதன் மூலம், தமிழக அரசு தற்போது பனை விதைப்பு பணியை வேளாண்மை துறையில் உள் அடங்கிய தோட்டக்கலை துறையின் வாயிலாக செய்வதையும், பனைத் தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகளையும், நல திட்டங்களையும் தொழிலாளர் துறையின் மூலமாக செய்வதையும், பனை சார்ந்த தொழில்களை வரைமுறைப்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் செய்ய வேண்டிய பணிகளை, கதர் மற்றும் காதி துறையின் மூலமும் செயல்படுத்தும் பணிகளையும் மாற்றி அமைக்க வேண்டும்.

இப்படி தலையை சுற்றி மூக்கை தொடும் வழிமுறைகளை விட்டு விட்டு, பனைவளத்துறை என்ற ஒரு தனித்துறையை நிறுவி, அதில் இந்த மூன்று துறையின் கீழ் இயங்கக்கூடிய பனை சார்ந்த பணிகளை ஒன்று இணைத்து தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராடினால், அது பனை தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதை விட்டுவிட்டு மரம் ஏறும் போராட்டங்களைப் போல் இப்படி வித்தைக் காட்டும் போராட்டங்களை செய்து கொண்டிருக்க கூடிய சீமான் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் நல்ல முறையில் சிந்தித்து பனைத் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் போராட வேண்டும். தமிழக அரசும் உண்மையிலேயே பனை தொழிலாளர்களுக்கு பயனடையும் வகையில் மேற்குறிப்பிட்ட பணிகளை ஒன்றிணைத்து பனைவளத்துறையை துவக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்க கூடிய அனைத்து ஊராட்சிகளிலும் பனை மரங்கள் எவ்வளவு உள்ளன என கணக்கெடுக்க வேண்டும். அதன்படி, அதிக அளவில் பனை மரங்கள் இருக்கக்கூடிய ஊராட்சிகளை தேர்வு செய்து அந்த ஊராட்சிகளில் எல்லாம் “பனை தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம்” அமைத்து கொடுக்க வேண்டும். அந்த ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடங்களில் இருக்கக்கூடிய அனஅனைத்த பனை மரங்களையும் அந்த தொழிலாளர் சங்கத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும். அந்த சங்கத்தில் தற்போது ஊராட்சிகளில் 100 நாள் திட்ட பணிகளில் பணி செய்யக்கூடிய அனைவரையும் இணைத்து உறுப்பினராக்க வேண்டும். அந்த குடும்பங்களில் இருக்கக்கூடியவர்களில் ஆண்கள் அல்லது பெண்கள் பனைமரம் ஏற விருப்பம் உள்ள அனைவருக்கும் பனைமரம் ஏறுவதற்கு பயிற்சி அளித்து, அவர்கள் மூலமாக அந்தப் பனை மரங்களில் இருந்து பதநீரை இறக்கி அவர்கள் மூலமாகவே பதநீரை விற்பனை செய்ய வேண்டும்.

விற்பனை செய்யப்பட்ட பதநீர் போக மீதம் உள்ள பதநீரை கருப்பட்டி காய்ச்சுவதற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். பணம் சங்கத்தின் வாயிலாக கருப்பட்டி காய்ச்சுவதற்கும் ஒரு சிலருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அந்த கருப்பட்டியை தொழிலாளர் சங்கத்தின் வாயிலாகவே தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

இந்த பனைத் தொழிலாளர் சங்கத்தின் வாயிலாக கிடைக்க கூடிய வருவாயை அந்த சங்கத்தில் இருக்கும் அங்கத்தினர் அனைவரும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக, தமிழக அரசின் மூலம் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பனைமரத்திற்கு ஆண்டிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சங்கத்தின் வாயிலாக, அரசுக்கு நேரடியாக அவர்களே செலுத்தும் வகையில் செய்ய வேண்டும்.

தமிழக அரசு இப்படி திட்டமிட்டு, தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஊராட்சிகளில் பனை தொழிலாளர்கள் சங்கங்களை அமைத்து பனை தொழிலாளர்களை நேரடியாக வருவாய் பெற செய்யும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தினால், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை – எளிய மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்வார்கள். இதை விட்டுவிட்டு கள்ளு கடையை திறந்தால், பனை மரங்களை அதிக அளவில் வைத்திருக்கக் கூடிய பெரும் பணக்காரர்களே அதன் மூலம் பயனடைவார்கள். அதுமட்டுமில்லாமல் பனை மரத்திலிருந்து கள்ளுவை இறக்கி விற்பனை செய்து விட்டால், நாம் பனையின் மூலம் கிடைக்கக்கூடிய மதிப்பு கூட்டப்பட்ட கருப்பட்டி, பனங்கற் கண்டுகள், உள்ளிட்ட வேறு எந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் கண்ணில் கூட பார்க்க முடியாது. ஆனால், பதநீர் இறக்கி விற்பனை செய்தால், அதை பெண்கள் மட்டுமல்ல குழந்தைகள் கூட குடிக்கலாம், அதனால் யாருக்கும் எந்த தீங்கும் கிடையாது. உடல் நலத்திற்கு பல விதங்களில் நன்மை பயக்கும், மேலும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பதநீர் மூலம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.

ஆகவே, தமிழக அரசு இந்நிலையை உணர்ந்து தமிழ்நாடு முழுவதும் கள்ளு கடைகளை திறக்க கூடிய முடிவை கைவிட்டு விட்டு, முதற்கட்டமாக, பனை மரங்கள் அதிகம் இருக்கக்கூடிய ஊராட்சிகளில் பனைத் தொழிலாளர்கள் சங்கங்களின் உருவாக்கி அதன் மூலம், ஆண் பெண் என பண்பாடு பார்க்காமல் யாரும் வேண்டுமானாலும் பனைமரம் ஏறுவதற்கு பயிற்சி அளிக்கவும், பதநீரை இறக்கி அதிலிருந்து மதிப்பு கூட்டு பட்ட பொருட்கள் செய்வதற்கு பயிற்சி அளிக்கும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *