சிவகங்கை மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள், சிறப்பு தள்ளுபடி விற்பனையினை குத்து விளக்கேற்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்து தெரிவிக்கையில்,
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இந்தியாவின் மிகப்பெரிய தலைமை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமாக திகழ்ந்து வருகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளை 90 ஆண்டுகளுக்கு மேலாக “கோ-ஆப்டெக்ஸ்” என்ற வணிக முத்திரையுடன் தற்போது 146 விற்பனை நிலையங்கள் மூலம் வணிகப்படுத்தும் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. பட்டு மற்றும் பருத்தி இரகங்களின் பாரம்பரிய மற்றும் நவீன சமகால வடிவமைப்புகளைக் கொண்டு சிறந்த கைத்தறி இரகங்களை வணிகப்படுத்தும் நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் விளங்கி வருகிறது.

தீபாவளி பண்டிகைக் காலத்திற்கான புதிய வடிவமைப்புகளில் பட்டுச் சேலைகள், பருத்தி சேலைகள், பருத்தி வேட்டிகள், படுக்கை விரிப்புகள் மற்றும் ஏராளமான இரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும், இளைய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கேற்ற வடிவமைப்புகளில் அவர்களது தேவைகளை நிறைவேற்றும் வண்ணம், பாரம்பரிய பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் புதுமையான வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களுடன் பல மதிப்பு கூட்டப்பட்ட இரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கைத்தறி இரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு இந்த ஆண்டும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பட்டு மற்றும் பருத்தி கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள 2 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கும் சேர்த்து ரூ.1.13 கோடி தீபாவளி விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிலையங்களின் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.90.96 லட்சங்கள் விற்பனை ஆகும்.
கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைத்தளமான www.cooptex.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் வாடிக்கையாளர்கள் வாங்கி பயன் பெறலாம். கோ-ஆப்டெக்ஸின் மாதாந்திர சேமிப்பு திட்டத்திலும் வாடிக்கையாளர்கள் சேர்ந்து பயன்பெறலாம். எனவே, கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கீடை விட அதிக அளவில் விற்பனை மேற்கொண்டு, மாவட்டத்திற்கு பெருமை தேடி தர அனைவரும் முழுஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

அரசுத்துறையின் பணியாளர்கள், தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோர் கைத்தறி ஆடைகளை வாங்கும் பொழுது, உற்பத்தி திறன் அதிகரிக்கும். அதேபோல் பொதுமக்களும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தும் பொழுது, நெசவாளர்களின் வளர்ச்சி அதிக நிலையை எட்டும். மேலும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு நம் ஒவ்வொருவரின் பங்களிப்பு இருந்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சந்திரசேகரன், துணை மண்டல மேலாளர் திருமதி அழகுசெல்வி, விற்பனை நிலைய மேலாளர் திருமதி முல்லைக்கொடி,கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செய்தியாளர் : வெ .ஆனந்த் எதிரொலி . இன் / 8939476777
