கமல்ஹாசன் கையில் இருப்பது என்ன? ஒரு புத்தகமா? ஒரு கலைப் படைப்பா? அல்லது இன்னும் அவர் நிகழ்த்திக் காட்ட வேண்டிய புதிய முயற்சிகளுக்கான கனவுகளா? கமல்ஹாசனைப் புரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்தக் கேள்வியைத் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளலாம். ஏனெனில், அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல; புதிய பாதைகளைத் தேடிச் செல்ல விரும்பும் தீராத தலைமை.

சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் அவர்களை அவருடைய அலுவலகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய புதிய நூல் “ அறிவோம் இதழியல்” அவரிடம் வழங்கினேன். வழக்கமான புன்னகையுடன் என்னை வரவேற்ற அவர், “என்ன ராசி பெரிய பெரிய புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கிறீர்கள்!” என்று நகைச்சுவையுடன் கூறியபடி நூலை வாங்கிப் புரட்டிப் பார்த்தார்.
ஒருவேளை சினிமா செய்ய வேண்டிய நேரத்தில் இது என்ன? என்றும் அவர் நினைத்திருக்கலாம்.

பிறகு, ‘வாசல் தோறும் கண்ணதாசன்’ என்ற எனது அடுத்த நூலை அவரிடம் கொடுத்தேன். அதை ஆர்வத்துடன் புரட்டிப் பார்த்த அவர், கண்ணதாசனுடன் பழகிய நாட்களின் நினைவுகளுக்குள் பயணிக்கத் தொடங்கினார். நூலைப் படித்தபோது, கண்ணதாசனுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ராஜபார்வை” என்ற பெயரைக் கண்ணதாசன் சூட்டியது, அவருடன் இணைந்து பாடல்கள் உருவான தருணங்கள், அவர்களுக்கிடையே நிகழ்ந்த இலக்கிய விவாதங்கள் எனப் பல நினைவுகளை அந்த நூலில் பதிவு செய்திருப்பதாக அவரிடம் சொன்னேன். புன்னகையுடன் நூலைப் புரட்டிப் பார்த்தார்.

அந்தச் சந்திப்பு எனக்கு மீண்டும் ஒன்றை நினைவூட்டியது. கமல்ஹாசனிடம் ஓர் அபூர்வமான பண்பு உண்டு. அவர் கலைஞராக மட்டுமல்ல, கலைக்குள் வாழும் மனிதராகவும் இருக்கிறார். பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதிலும், புதிய சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்வதிலும் அவருக்கு எப்போதும் ஆர்வம் உண்டு.

கமல்ஹாசன் நடிகரா, தயாரிப்பாளரா, இயக்குநரா, இலக்கிய நேசரா, அரசியல்வாதியா? இப்படி அவரைப் பல்வேறு அடையாளங்களுக்குள் நிறுத்திப் பார்க்கிறோம். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, தன்னுடைய கலைப் பயணத்தில் தொடர்ந்து புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு மனிதராகவே நான் அவரைப் பார்க்கிறேன்.

அவருடன் நெருக்கமாக இருந்தும், சில நேரங்களில் விலகி நின்றும் அவரைக் கவனித்திருக்கிறேன். அவர் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற உறுதி கொண்டவர். சவால்களைச் சுமையாக அல்ல, புதிய அனுபவங்களாக எடுத்துக்கொள்பவர். அந்தப் பயணத்தில் பல சிராய்ப்புகளைச் சந்தித்திருக்கிறார்; பலமுறை விழுந்திருக்கிறார்; பலமுறை எழுந்திருக்கிறார். ஆனால், ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் தன்னைச் சுயபரிசோதனை செய்துகொண்டு மீண்டும் முன்னேறுவதற்கான மனப்பக்குவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய கலைத்திறனைச் சமூகத்தின் முன் நிறுத்துவதிலும், அதன் வழியாக மக்களுடன் உரையாடுவதிலும் அவருக்கு இருக்கும் ஆர்வம் தனித்துவமானது. புதிய முயற்சிகளை மேற்கொள்வதும், அவற்றின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் அவரது பயணத்தின் முக்கியமான அம்சங்கள்.

நட்புக்கும் அரசியலுக்கும் இடையில்…

கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட காலத்தில், என்னையும் ஒரு பொறுப்பில் இணைந்திருக்குமாறு அழைத்தார். அப்போது நான் அவரிடம் சொன்னேன்:

“நான் ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினராக இருப்பதைவிட, உங்களுடைய நண்பராக இருப்பதையே விரும்புகிறேன். ஏனெனில், நட்பு என்பது காலாவதியாகாத ஒன்று!”

நான் அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. கலை மீதும் இலக்கியத்தின் மீதும் ஆழ்ந்த நேசம் கொண்ட ஒருவருடன் அரசியல் களத்தில் பயணிப்பது என்பது வேறு; அவருடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு நட்பைப் பேணுவது என்பது வேறு. அரசியல் என்பது பல்வேறு கருத்து வேறுபாடுகளையும் சவால்களையும் கொண்ட பொதுவாழ்வின் களம். அந்தக் களத்தில் எனக்கான இடம் எது என்பதை நான் சிந்தித்துப் பார்த்தேன்.

கமல்ஹாசனுடன் பல்வேறு கருத்துகளைப் பரிமாறிக்கொண்டபோதும், அவருடைய கட்சியில் நான் இணையவில்லை. அதனால் எங்கள் நட்பின் மதிப்பு குறைந்துவிடக் கூடாது என்பதே எனது விருப்பமாக இருந்தது.

அரசியல் என்பது மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு கருவி. அந்தக் கருவியைப் பயன்படுத்திச் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்குவது ஒரு பெரிய பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான மனத்துணிவும், அதற்குரிய செயல்திறனும் அனைவரிடமும் ஒரே அளவில் இருப்பதில்லை.

என்னைப் பொறுத்தவரை, மக்களின் உணர்வுகளையும் சமூகத்தின் தேவைகளையும் எழுத்தின் வழியாகப் பேசுகின்ற ஒரு பார்வையாளராகவும் படைப்பாளியாகவும் இருப்பதையே நான் தேர்ந்தெடுத்தேன். அதுவே எனது இயல்புக்கும் நம்பிக்கைக்கும் பொருத்தமான பாதை என்று கருதினேன்.

விழுவதும், எழுவதும் ஒரு பயணத்தின் பகுதிகள்!

கமல்ஹாசனின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் எதிர்கொண்ட சவால்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அவர் தேர்ந்தெடுத்த பாதைகள் எப்போதும் எளிதானவையாக இருந்ததில்லை. சில முயற்சிகள் வெற்றியைத் தந்திருக்கின்றன; சில முயற்சிகள் விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியிருக்கின்றன.

ஆனால், தொடர்ந்து முயற்சி செய்வதற்கான ஆர்வத்தை அவர் கைவிடவில்லை. ஒரு கலைஞன் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்வதுதான் அவனுடைய நீண்ட பயணத்துக்கு உயிரூட்டுகிறது. அந்த வகையில், கமல்ஹாசனின் பயணம் பல தலைமுறையினருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியது.

அவர் கடந்த காலத்தின் வெற்றிகளில் மட்டும் தங்கிவிட விரும்புவதில்லை. அடுத்ததாக என்ன செய்யலாம், இன்னும் எப்படிப் புதியதாகச் சிந்திக்கலாம், கலைக்குள் எந்தப் புதிய பாதையைத் திறக்கலாம் என்ற கேள்விகள் அவரைத் தொடர்ந்து இயக்குகின்றன.

அதனால்தான், கமல்ஹாசனை ஒரு குறிப்பிட்ட துறைக்குள் அடைத்துவிட முடியாது என்று நான் கருதுகிறேன். அவருடைய பல்வேறு அடையாளங்களுக்குப் பின்னால், தொடர்ந்து கற்றுக்கொள்ளவும் முயற்சி செய்யவும் விரும்பும் ஒரு கலை மனம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

நவம்பர் 7: புதிய முயற்சிகளின் இன்னொரு தொடக்கம்!

நவம்பர் 7, கமல்ஹாசனின் பிறந்தநாள். அவரைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பிறந்தநாளும் வயது கூடுவதைக் குறிக்கும் ஒரு நாளாக மட்டுமல்லாமல், புதிய முயற்சிகளையும் புதிய இலக்குகளையும் நினைவுபடுத்தும் நாளாகவும் அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அவர் ஏற்றுக்கொண்ட சவால்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளட்டும். அவர் கனவு காணும் புதிய முயற்சிகள் அவருடைய கலைப் பயணத்துக்கு மேலும் பல பரிமாணங்களைச் சேர்க்கட்டும். இலக்கியத்தின் மீதும், வாசிப்பின் மீதும், மனிதர்களின் அனுபவங்களின் மீதும் அவர் கொண்டிருக்கும் ஆர்வம் தொடர்ந்து வளரட்டும்.

எனக்கு அவர் ஒரு திரைக் கலைஞர் மட்டுமல்ல; பல்வேறு தளங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பும் படைப்பாளி. அவருடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடிந்ததும், நட்பின் நெருக்கத்தை அனுபவிக்க முடிந்ததும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.

கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

அவர் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையட்டும். அவரது கலைப் பயணம் தொடர்ந்து புதிய சிந்தனைகளுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கட்டும். இலக்கியத்தையும் கலையையும் நேசிக்கும் அவரது மனம் மேலும் பல படைப்புகளுக்கு வித்திடட்டும்.

புதிய பாதைகளை விரும்பும் தலைமை பயணிக்கு, புதிய தொடக்கங்கள் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

— ராசி அழகப்பன்
எழுத்தாளர், திரைப்பட இயக்குநர்

✒️நா.மணிவண்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed