நீர்வழிப் பாதைகளை தூர்வார ஒதுக்கிய நிதியில் முறைகேடு என குற்றச்சாட்டு! “அரசு கஜானாவை தொட மாட்டேன், தொடுபவர்களையும்,
தொட்டவர்களையும் விட மாட்டேன்” என்று பேசிய டயலாக்கை செயல்படுத்துக!



புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரருமான என்.ஆர். சுதன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நீர் நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகள் முறையாக தூர்வாரப்படாததால் மழைகாலமான தற்போது நீர் சேமிப்பு என்பது காணல் நீராகி வருகிறது.

ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதியில் பெரிய குளங்களாக வெள்ளூர்குளம், கஸ்பாகுளம், பெருங்குளம், கால்வாய்குளம், தென்கரைகுளம், ‘கடலில் பாதி கடம்பா’ என அழைக்கபடும் கடம்பாகுளம் ஆகிய குளங்கள் நிரம்பி இதன் கீழ் உள்ள 13 குளங்களும் பயன் பெற்று விவசாயத் தொழில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த குளங்களுக்கு வரும் நீர் வரத்துக் கால்வாய்கள் முற்றிலும் தூர்வாரப்படவில்லை. எனவே இந்தப் பகுதியில் விளையும் ‘விவசாய உற்பத்திகள்’ கேள்விக்குறியாகியதுடன், இங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நீர் நிலைகளைத் தூர்வார கடந்த அரசு பலகோடிகள் ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால் இங்கு எந்த பணியும் நடைபெறாததுடன் பல்வேறு முறைகேடுகள் பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறையில் நடைபெற்று உள்ளது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய், "அரசு கஜானாவை தொட மாட்டேன், தொடுபவர்களையும்,

தொட்டவர்களையும் விடவும் மாட்டேன்” என்று பேசிய டயலாக்கை செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு, நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்கும் போது, ஆளும் அரசியல் கட்சியினர் மற்றும் மணல் மாஃபியாக்கள் தலையீட்டால் விவசாயிகளின் நலன் கேள்விகுறியாகிறது. எந்த நோக்கத்திற்காக வண்டல் மண்ணை அள்ளும் திட்டத்தை அரசு கொண்டு வந்ததோ? அந்தத் திட்டம் உண்மையான விவசாயிகளுக்கு பயன்படவில்லை.

குறிப்பாக திருச்செந்தூர் பகுதியில் உள்ள குளங்களில் இருந்து அள்ளப்படும் மண் வணிகரீதியாக பயன்படுத்தப்பட்டு, ‘விவசாய நிலங்களை தரிசாக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது”. எனவே நேர்மையான அரசு அதிகாரிகளைக் கொண்டு வெளிப்படைத் தன்மையோடு விவசாயிகளின் ஆவணங்களை சரி பார்த்து “அரசு இயந்திரங்கள் மூலம்” நேரிடையாக வண்டல் மண், குளங்களில் இருந்து எடுத்து விவசாயப் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

இதன் மூலம் விவசாய நிலங்களின் தரம் மேம்படுவதுடன், மணல் மாஃபியா கும்பல்கள் உருவாவதைத் தடுக்க முடியும். இவ்வாறு ஒய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரரும், புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளருமான என்.ஆர். சுதன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

செய்தியாளர் தவசிக்கனி
எதிரொலி.இன் / நெல்லை மாவட்டம்.
கைபேசி எண்: 8825850212

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed