காஞ்சிபுரம் அருகே தாத்திமேடு பகுதியில் பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தி பதுக்கி வைத்திருந்த 4 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரைத் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாறு, பாலாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று முக்கிய ஆறுகள் பாய்ந்து செல்கின்றன. நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மேற்கண்ட ஆறுகளில் மணல் எடுப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு சார்பில் கடுமையான தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இருப்பினும், தடையைப் பொருட்படுத்தாமல் ஒரு சில மணல் மாஃபியா கும்பல்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அடுத்த தாத்திமேடு விஜயலட்சுமி நகர் பகுதியில் மணல் திருடப்பட்டு, கடத்தி விஜயலட்சுமி நகர் பகுதியில் காலியாக இருந்த இடத்தில் நான்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சிவகாஞ்சி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் மணல் கடத்தல் கும்பலை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, தாத்திமேடு பகுதிக்கு அருகே 4 லாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்தி வந்து பதுக்கி ரபீஸ் போட்டு மூடி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், மணலுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லாரிகளையும் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை மீட்டுத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மளிகை செட்டித் தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரும் இணைந்து இந்தச் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரையும் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
