மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (35) ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து ஒன்றில் மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த அவரது மறைவு, அக்குடும்பத்தினரை கடுமையான சோகத்திலும் நிதி நெருக்கடியிலும் ஆழ்த்தியது.

இதனையடுத்து, மறைந்த மாரிமுத்து உறுப்பினராகச் செயல்பட்டு வந்த ‘வைகை மீட்டர் ஆட்டோ’ அமைப்பைச் சேர்ந்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வழக்கறிஞர் பாலாஜி தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து, அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், தங்கள் சார்பில் சேர்க்கப்பட்ட ரூ.1,25,000 (ஒரு லட்சத்து 25 ஆயிரம்) நிதி உதவியை அவரது குடும்பத்தினரிடம் வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர் மேலும் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கும் உதவுவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வைகை மீட்டர் ஆட்டோ அமைப்பின் உறுப்பினர்கள் தமிழரசன் மற்றும் சுரேஷ் கூறுகையில்:

“மாரிமுத்துவின் குழந்தைகள் படிப்பு உட்பட எதிர்காலத்தில் தேவைப்படும் எந்தவொரு உதவிக்கும் எங்கள் அமைப்பு எப்போதும் உறுதுணையாக இருக்கும். இதுவரை எங்கள் அமைப்பின் மூலம் உயிரிழந்த 7 சக ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு இதுபோன்று நிதியுதவி அளித்து ஆதுரவு வழங்கியுள்ளோம். 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் உறுப்பினர்களாக உள்ள எங்கள் அமைப்பில், ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற தொகையைப் பகிர்ந்து இந்த நிதியைத் திரட்டியுள்ளோம்,” என்று தெரிவித்தனர்.

கடின உழைப்பால் அன்றாட வாழ்வை நடத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள், தங்களில் ஒருவரை இழந்த நிலையிலும் ஒன்றுதிரண்டு, சக ஓட்டுநரின் குடும்பத்திற்குத் தோள் கொடுத்து உதவியுள்ள இந்த மனிதாபிமானச் செயல் பொதுமக்களிடையேயும் சமூக வலைதளங்களிலும் பெரும் பாராட்டையும் நெகிழ்ச்சியையும் பெற்று வருகிறது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி.இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed