விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் தமிழக அரசின் இலவச சேலை நெசவு செய்யும் பெடல் தறி நெசவாளர்கள் புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம், வேலை இழப்புக்கு நிவாரணம், இருப்பு சேலைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்வது தொடர்பாக கைத்தறித்துறை சார்பில் நியமிக்கப்பட்ட குழுவினர் நெசவாளர் சங்க பிரதிநிதிகள் உடன் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆலோசனை நடத்தினர்.
ராஜபாளையம் அருகே புனல்வேலி கூட்டுறவு நெசவாளர் சங்கம் முன் இரு நாட்களாக கஞ்சி தொட்டி திறந்து நெசவாளர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று மாலை தீப்பந்தம் ஏந்தியடி ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நெசவாளர்கள் கூறுகையில்:

தமிழக அரசின் பொங்கல் சேலை நெசவு செய்யும் நெசவாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது வாழ்வாதார பிரச்சனை குறித்து தொகுதி எம்எல்ஏவும் அமைச்சரான ஜெகதீஸ்வரியை சந்தித்து இரு முறை மனு அளித்துள்ளோம். கூலி உயர்வு, வேலை இழப்புக்கு நிவாரணம், இருப்பு சேலைகளை கொள்முதல் செய்தல் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை, சாலை மறியல், கஞ்சி தொட்டி திறப்பு மற்றும் பிச்சை எடுக்கும் போராட்டம் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆனால் தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் ஜகதீஸ்வரி இதுவரை எங்களை நேரில் சந்தித்து எங்கள் பிரச்சனை குறித்து பேசவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பேசிய நிலையில், எங்கள் தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் பிரச்சனையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு எங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காணா விடில் போராட்டம் மேலும் தீவிரமடையும், என்றனர்.

செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed