3 மாதம் தலைமறைவாக இருந்த கவிதா உள்பட நால்வரையும் கேரளா மாநிலம் கொல்லம் அருகே குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாநகர் அவனியாபுரம் SKR நகர் பகுதியை சேர்ந்த கவிதா – தென்னரசு தம்பதியினர் தனது மகன்களான , ராம்கணேஷ்பாண்டியன், கார்த்திகேயன் ஆகியோருடன் வசித்துவந்தனர். இந்நிலையில் கவிதா அந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி சீட்டு மற்றும் மகளிர் குழு என பல்வேறு விதமான வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார் .

இதனால், அவரை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட பெண்கள் தீபாவளி சீட்டு மற்றும் மகளிர் குழுவில் இணைந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கவிதா தனது மகன் ராம்கணேஷ் பாண்டியனுக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதற்கு பெண்பார்க்க செல்வதாகவும் அப்போது நகை அதிகளவிற்கு அணிந்து செல்ல வேண்டும் அதனால் தங்களிடம் இருக்கும் நகையை தருமாறு அப்பகுதியை சேர்ந்த பெண்களிடம் கேட்டுள்ளார். கவிதா நன்கு பழகியதன் அடிப்படையில் அருகிலிருந்த மற்ற பெண்கள் தங்க நகையை நம்பி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கவிதா நகையை திரும்பி கேட்டபோது நாளை தருவதாக கூறிய நிலையில் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. தொடர்ந்து அவரது கணவர் மற்றும் மகன்களை தொடர்பு கொண்ட போதும் குடும்பத்தோடு போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.
ஒவ்வொருவரும் அருகிலுள்ள பெண்கள் தலா 2 பவுன் தொடங்கி 15 பவுன் நகை வரை கொடுத்துள்ளனர் . ஒருவரிடம் வாங்கும் நகையை மற்றவரிடம் சொல்ல வேண்டாம் என காதும் காதும் வைத்தது போல இருக்க வேண்டுமென கூறி கவிதா நகையை வாங்கிச் சென்றுள்ளார். இதேபோன்று கூறி தனது மகன்களை அனுப்பி வைத்து பெண்களிடம் இருந்து 150 பவுன் நகையை வாங்கிய நிலையில் 10 கோடிக்கு மேலாக இது போன்ற மோசடியில் ஈடுபட்டு நகைகளை எடுத்து சென்றது தெரியவந்துள்ளது.

20 வருடமாக பழகியவர் பக்கத்து வீட்டுக்காரர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு பெண்களும் நம்பிக்கையின் அடிப்படையில் நகைகளை கொடுத்துள்ளனர். ஆனால், நகையை கேட்க சென்ற போது குடும்பத்தோடு ஆட்கள் இல்லாத நிலையில் பதறிபோன பெண்கள் தங்களது நகையை மோசடி செய்து தலைமறைவான கவிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை அவனியாபுரம் காவல்நிலையம் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதன் அடிப்படையில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கவிதா மற்றும் குடும்பத்துடன் கேரளாவில் பதுங்கி இருந்தது தெரிய வந்ததை தொடர்ந்து அவனியாபுரம் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அங்கு தலை மறைவாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை அவனியாபுரம் குற்ற பிரிவு ஆய்வாளர் அனுஷா, மனோகர, SI மணிராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் கைது செய்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் கவிதா அவரது கணவர் தென்னரசு மற்றும் மகன்கள் இருவர் உள்பட 4 போரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் / காளமேகம் / எதிரொலி / 8939476777
