சட்டமன்ற கூட்டத் தொடரில் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மாநிலம் முழுதும் கடையடைப்பு போராட்டத்தை வெற்றியடைய செய்வோம் – டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பேட்டி…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை பணிப் புறக்கணிப்பு செய்து முற்றுகையிட்டு டாஸ்மாக் விற்பனையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தங்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு மற்றும் காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எந்த அரசும் செவிசாய்க்காததால், நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சில சங்கங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கிய நிலையில், விற்பனையாளர்கள் நலச்சங்கம் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க மாநில துணைத் தலைவர் ராமர் தலைமையில் ஏராளமான விற்பனையாளர்கள் கப்பலூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலக ஊழியர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணைத் தலைவர் ராமர், “23 ஆண்டு காலமாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் கோரி போராடி வருகிறோம். சென்ற ஆட்சியாளரும், தற்போதைய த வெ க அரசும் எங்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை. இடவசதி இல்லை, கழிப்பறை இல்லை, பணி பாதுகாப்பே இல்லாமல் மன உளைச்சலில் பணியாற்றி வருகிறோம். கேரளா போன்று எங்களுக்கு சம்பள உயர்வு, பணி நிரந்தரம் வழங்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், தலைமை அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம்” என்றார்

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed